ரெயில் என்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்கத் தடை: தெற்கு ரெயில்வே போட்ட திடீர் உத்தரவுக்கு காரணம் என்ன?
- இளநீர் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதை ரெயில்வே தடை செய்துள்ளது.
- லோகோ பைலட் சங்கங்கள் இந்த உத்தரவை கடுமையாக கண்டித்துள்ளது.
ரெயில் இன்ஜின் ஓட்டுனர்கள் பணிக்கு முன் அல்லது பணியின் போது இளநீர் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதை ரெயில்வே தடை செய்துள்ளது.
திருவனந்தபுரம் மண்டல சீனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் வெளியிட்ட சுற்றறிக்கையில், 'பணிக்கு வரும் போதும், பணி முடிந்து போகும் போதும், லோகோ பைலட்டுகள், இளநீர், இருமல் மருந்துகள், குளிர் பானங்கள் மற்றும் வாய் புத்துணர்ச்சியூட்டிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
ரெயில் இன்ஜின் டிரைவர்களிடம் ஆல்கஹால் பரிசோதனை செய்யும் கருவியின் மூலம் சோதனை செய்யும் போது, அவர்களின் உடலில் ஆல்கஹாலின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது
ஆனால் இரத்தப் பரிசோதனைகளில் ஆல்கஹால் தடயங்கள் எதுவும் இல்லை.
இதுபற்றி கேட்டால் தாங்கள் இளநீர், பழங்கள், இருமல் மருந்து, குளிர் பானங்கள் சாப்பிட்டதாக ரெயில் இன்ஜின் டிரைவர்கள் வெவ்வேறு காரணங்களை கூறுகின்றனர். எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் இவை அனைத்தையும் உட்கொள்ள தெற்கு ரெயில்வே தடை விதித்துள்ளது.
ஒரு லோகோ பைலட் தடைசெய்யப்பட்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றை உட்கொள்ள விரும்பினால், டிப்போவில் உள்ள க்ரூ கன்ட்ரோலருக்கு (CRC) எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். கூடுதலாக, எந்தவொரு ஆல்கஹால் கொண்ட மருந்தையும் ரெயில்வே மருத்துவ அதிகாரியின் முன் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லோகோ பைலட் சங்கங்கள் இந்த உத்தரவை கடுமையாக கண்டித்துள்ளது. "பழுதடைந்த ஆல்கஹால் பரிசோதனை உபகரணங்களை மாற்றுவதற்குப் பதிலாக, ஊழியர்களை தேவையற்ற கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்குகிறார்கள். இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட வேண்டும்" என்று அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேஷனின் மத்திய குழு உறுப்பினர் பி.என். சோமன் வலியுறுத்தியுள்ளார்.