இந்தியா

கடந்த 2 ஆண்டுகளில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு- மத்திய அரசு தகவல்

Published On 2025-03-28 08:05 IST   |   Update On 2025-03-28 08:05:00 IST
  • 2021-22-ல் 103.4 சதவீதமாக இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம், 2023-24-ல் 97.1 ஆக சரிந்திருப்பதாக தெரிவித்தார்.
  • அனைத்து பிரிவு மாணவர் சேர்க்கை 57.56-ல் இருந்து 56.2 ஆகவும் சரிந்திருக்கிறது.

புதுடெல்லி:

மக்களவையில் நேற்று பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்த கேள்விகளுக்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி துர்காதாஸ் உய்கி பதிலளித்தார். அப்போது தொடக்கப்பள்ளிகளில் பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை விகிதம் கடந்த 2023-24-ம் கல்வி ஆண்டில் குறைந்திருப்பதாக கூறினார்.

குறிப்பாக 2021-22-ல் 103.4 சதவீதமாக இருந்த மொத்த சேர்க்கை விகிதம், 2023-24-ல் 97.1 ஆக சரிந்திருப்பதாக தெரிவித்தார். அதேநேரம் ஒப்பீட்டளவில் அனைத்து சமூக மாணவர்களும் தொடக்கப்பள்ளிகளில் சேரும் விகிதம் 100.13 சதவீதத்தில் (2021-22) இருந்து 91.7 (2023-24) ஆக குறைந்திருக்கிறது.

உயர்நிலைப்பள்ளிகளில் பழங்குடியின மாணவர் சேர்க்கை 78.1 சதவீதத்தில் இருந்து 76.9 ஆகவும், அனைத்து பிரிவினரின் விகிதம் 79.56-ல் இருந்து 77.4 ஆக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மேல்நிலைப்பள்ளிகளில் பழங்குடியினர் மாணவர் சேர்க்கை விகிதம் 52-ல் இருந்து 48.7 ஆகவும், அனைத்து பிரிவு மாணவர் சேர்க்கை 57.56-ல் இருந்து 56.2 ஆகவும் சரிந்திருக்கிறது.

முன்னதாக பள்ளிகளில் சமீபத்திய ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாக நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி மக்களவையில் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக மோடி அரசை குறை கூறியிருந்த அவர், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News