தேர்வில் காப்பியடித்ததை தடுத்த ஆசிரியர்களின் வாகனங்கள் மீது பட்டாசு வீசிய பள்ளி மாணவர்கள்
- ஒரு அறையில் சில மாணவர்கள் தேர்வில் காப்பியடித்து எழுத முயன்றுள்ளனர்.
- தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காத ஆசிரியர்கள் மீது அந்த மாணவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காத ஆசிரியர்களின் வாகனத்தின் மீது மாணவர்கள் சிலர் பட்டாசு வீசியிருக்கின்றனர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் மலப்புரம் சேந்தப்புராயா பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 தேர்வு நடந்திருக்கிறது. தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வந்துள்ளனர். இந்தநிலையில் ஒரு அறையில் சில மாணவர்கள் தேர்வில் காப்பியடித்து எழுத முயன்றுள்ளனர்.
அதனை அந்த அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீபுகுமார் மற்றும் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் தடுத்துள்ளனர். ஆனால் எதிர்காலம் கருதி காப்பியடிக்க முயன்ற மாணவர்களை பற்றி அந்த ஆசிரியர்கள் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காத ஆசிரியர்கள் மீது அந்த மாணவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
தேர்வு எழுதி விட்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்த அவர்கள், தேர்வில் காப்பியடிப்பதை தடுத்த ஆசிரியர்களின் வாகனங்கள் மீது பட்டாசுகளை வீசினர். ஆசிரியர்களின் வாகனங்களின் மீது விழுந்து பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் அந்த பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காததால் தங்களின் வாகனங்களின் மீது பட்டாசு வீசப்பட்டிருப்பதாக அந்த ஆசிரியர்கள் பள்ளியின் முதல்வரிடம் தெரிவித்தனர். அவர் அதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்களின் வாகனங்களின் மீது பட்டாசு வீசியது யார்? என்பதை கண்டு பிடிக்க அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.