மத்திய நிதி அமைச்சருடன் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
- ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை புது டெல்லியில் நேரில் சந்தித்தனர்.
- 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் ஊதிய நிலுவை தொகையான ரூ.1056 கோடியை விடுவிக்க கோரிக்கை.
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்துள்ளார்.
அப்போது, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் ஊதிய நிலுவை தொகையான ரூ.1056 கோடியை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி. கனிமொழி மனு அளித்துள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 14ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.1,056 கோடி நிதியினை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்கள் கடந்த 13.01.2025 அன்று பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.
இன்று, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி மற்றும் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர்
ககன்தீப் சிங் பேடி ஆகியோருடன் இணைந்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை புது தில்லியில் நேரில் சந்தித்து, இத்திட்டத்திற்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்தினோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.