ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசிய வழக்கில் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் விடுவிப்பு
- ஜெகன்மோகன் ரெட்டி கண் புருவத்திற்கு மேல் காயம் ஏற்பட்டது.
- கைது செய்யப்பட்டவர்களை கடந்த 4 நாட்களாக மறைவான இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் கடந்த வாரம் ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பஸ்சில் இருந்தபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது மர்ம நபர்கள் ஜெகன்மோகன் ரெட்டி மீது கற்களை வீசினர். இதில் ஜெகன்மோகன் ரெட்டி கண் புருவத்திற்கு மேல் காயம் ஏற்பட்டது.
இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் வெமுலா துர்கா ராவ் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை கடந்த 4 நாட்களாக மறைவான இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாததால் துர்கா ராவ் மனைவி தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் விஜயவாடா போலீஸ் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் வக்கீல் மூலம் ஆந்திர ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்தனர்.
இதனை அறிந்த போலீசார் துர்கா ராவை நேற்று விடிவித்தனர். இது குறித்து துர்கா ராவ் கூறுகையில், கல்வீச்சு சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என போலீசாரிடம் பலமுறை கூறியும் அவர்கள் காதில் வாங்கவில்லை.
துப்பாக்கியை காட்டி குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்தினர். தெலுங்கு தேசம் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்ததால் என் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
குற்ற சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் என்னிடம் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.