தெலுங்கானாவில் சொத்து தகராறில் தாத்தாவை குத்தி கொலை
- தாத்தா கணக்கு கேட்ட போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கீர்த்தி தேஜாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த பேகம் பேட்டையை சேர்ந்தவர் சந்திரசேகர ஜனார்த்தன் ராவ் (வயது 48). தொழிலதிபரான இவருக்கு படஞ்சேரு, பாலா நகர் பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன.
இவரது மகள் சரோஜினி தேவி. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகன் கீர்த்தி தேஜாவுடன் (29) தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
கீர்த்தி தேஜா தனது தாத்தாவிடம் அடிக்கடி பணத்தை வாங்கி ஆடம்பர செலவு செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தாத்தாவிடம் ரூ.4 கோடி வாங்கினார்.
தாத்தாவிடம் இருந்து வாங்கிய பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து செலவழித்தார். இது குறித்து அவரது தாத்தா கணக்கு கேட்ட போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கீர்த்தி தேஜா நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மது போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது தனது தாய்க்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்து தர வேண்டுமென தாத்தாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதற்கு சந்திரசேகர ஜனார்த்தன் ராவ் ஏற்கனவே தன்னிடம் வாங்கிய கோடிக்கணக்கான பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டாய். சொத்துக்களை பிரித்து கொடுத்தால் அதையும் செலவு செய்து விடுவாய் என கூறி மறுப்பு தெரிவித்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த கீர்த்தி தேஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாத்தாவின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் வலி தாங்காமல் ஜனார்த்தன் ராவ் கதறி துடித்தார்.
தந்தையின் அலரல் சத்தம் கேட்டு ஓடி வந்த சரோஜினி தேவி மகனை தடுத்தார். ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த கீர்த்தி தேஜா தாயாரையும் கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் துடி துடித்த சந்திரசேகர ஜனார்த்தன் ராவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அக்கம் பக்கத்தினர் இது குறித்து பஞ்சகுடா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரோஜினி தேவியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சந்திரசேகர ஜனார்த்தன் ராவ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கீர்த்தி தேஜாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். சொத்தை பிரித்து தர மறுத்த தாத்தாவை கொலை செய்து, தடுக்க வந்த தாயையும் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.