இந்தியா

டெல்லியை கைப்பற்றும் பாஜக.. முதல்வர் ஆகும் பர்வேஷ் வர்மா?.. கெஜ்ரிவாலை தோற்கடித்த இவர் யார்?

Published On 2025-02-08 12:22 IST   |   Update On 2025-02-08 14:35:00 IST
  • முன்னாள் டெல்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் இவர்.
  • விஜேந்தர் குப்தா டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியவர்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி மத்தியில் ஆளும் பாஜக முன்னிலையில் உள்ளது. 10 வருடமாக டெல்லியை ஆண்ட ஆம் ஆத்மி பின்னிலையில் உள்ளது. தனித்து போட்டியிட்ட காங்கிரசும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ஆம் ஆத்மியின் முதல்வர் முகமாக அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிறுத்தப்பட்டார். ஆனால் பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் களம் கண்டது. இந்நிலையில் பாஜக வெற்றி பெறும் பட்சத்தில் யார் முதல்வர் ஆக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்த வகையில் முதல்வர் ரேஸில்  பர்வேஷ் வர்மா முன்னிலை பெற்றுள்ளார். முன்னாள் டெல்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் இவர்.

அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து புது தில்லி தொகுதியில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். கெஜ்ரிவாலை சுமார் 5000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து  பர்வேஷ் வெற்றி பெற்றுள்ளார். இவரே டெல்லி முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக பாஜக முதல்வர் வேட்பாளர் ரேஸில் இருந்தவர்கள்:

ரமேஷ் பிதுரி: டெல்லி முதல்வர் அதிஷியை எதிர்த்து கல்காஜி தொகுதியில் போட்டியிட்டார். ஆம் ஆத்மி கட்சி பிதுரியை பாஜகவின் முதல்வர் முகமாக அறிவித்து, தேர்தல் பிரச்சாரங்களின் போது அவரை விவாதத்திற்கு அழைத்தது. பிரியங்கா காந்தியின் கன்னங்களை போல் சாலை அமைப்பேன் என கூறி சர்ச்சையில் சிக்கியவர்.

துஷ்யந்த் கௌதம்: பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவர். குறிப்பாக தலித் தலைவர். மாநிலங்களவை எம்.பி.யாகவும் பணியாற்றியுள்ளார்.

விஜேந்தர் குப்தா: டெல்லியில் பாஜகவின் மூத்த தலைவரான இவர் முதல்வர் பதவிக்கு முக்கிய போட்டியாளராக இருந்தார்.

டெல்லி பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்தவர் இவர். ஆம் ஆத்மியின் ஆதிக்கம் இருந்தபோதிலும் 2015 மற்றும் 2020 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் ரோஹினி தொகுதியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். விஜேந்தர் குப்தா டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர்.

கைலாஷ் கெலாட்: பிஜ்வாசன் தொகுதியில் போட்டியிடும் கெலாட், பாஜக முதல்வர் ரேஸில் போட்டியிடும் வாய்ப்பு அதிகம் இருந்தது. மூத்த தலைவரான கைலாஷ் கெலாட், ஆம் ஆத்மி ஆட்சியில் அமைச்சராக இருந்து, தேர்தலுக்கு முன் பாஜகவுக்குத் தாவினார். பிஜ்வாசன் தொகுதியில் தற்போது முன்னிலை வகிக்கிறார்.

அர்விந்தர் சிங் லவ்லி: காந்தி நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவரான அர்விந்தர் சிங், தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்தார்.

கபில் மிஸ்ரா: கரவால் நகரில் போட்டியிடும் மிஸ்ரா, தற்போதைய நிலவரப்படி முன்னிலை வகிக்கிறார். ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்.

Tags:    

Similar News