குழப்பத்தில் நடனமாடிய ஆம் ஆத்மி தொண்டர்கள்.. டெல்லியில் பாஜக கொண்டாட்டங்கள் தொடக்கம்
- 27 வருடங்களுக்கு பிறகு பாஜக டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைகிறது.
- பர்வேஷ் சர்மா முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பாஜக 47, ஆம் ஆத்மி கட்சி 23 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலாவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஜங்புராவில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவினர். ஆம் ஆத்மிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முதல்வர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார்.
27 வருடங்களுக்கு பிறகு பாஜக டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைகிறது. இதனால் பாஜகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புது டெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை தோற்கடித்த பாஜக வேட்பாளர் பர்வேஷ் சர்மா முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி ஆம் ஆத்மி பின்தங்கிய போதிலும் ஆம் ஆத்மி தலைமையகத்தின் வெளியே அக்கட்சியின் தொண்டர்கள் நடனமாடி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. வெற்றி உறுதியானதும் பாஜக அலுவலகத்தில் களைக்கட்டிய கொண்டாட்டங்களின் வீடியோக்களும் வெளியாகி உள்ளது.