தேர்தல் முடிவு பின்னடைவுதான்... ஆனால் பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்- அதிஷி
- பாஜக-வின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போர் தொடரும். தேர்தல் முடிவு ஆம் ஆத்மிக்கு பின்னடைவுதான்.
- ஆனால் டெல்லி மற்றும் நாட்டுக்கு மக்களுக்கான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்.
கடந்த 5-ந்தேதி நடைபெற்ற டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே பாஜக முன்னிலை பெற்றது. சுமார் 48 இடங்களை கைப்பற்றி 27 வருடத்திற்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது.
கடந்த இரண்டு தேர்தல்களில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, இந்த தேர்தலில் மிகப்பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளது. 2015-ல் 67 இடங்களிலும், 2020-ல் 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர். முதலமைச்சராக இருக்கும் அதிஷி பெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் டெல்லி மாநில தேர்தல் முடிவு குறித்து அதிஷி கூறியதாவது:-
எங்களுடன் உறுதியாக நின்ற டெல்லி மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். பாஜக-வின் சர்வாதிகாரம் மற்றும் குண்டர்கள் ராஜ்ஜியம் ஆகிவற்றிற்கு எதிரான போர் தொடரும். தேர்தல் முடிவு ஆம் ஆத்மிக்கு பின்னடைவுதான். ஆனால், டெல்லி மற்றும் நாட்டுக்கு மக்களுக்கான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்.
என் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி. என்னுடைய அணிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு எங்களுடைய கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். என்னுடைய தொகுதியில் நான் வெற்றி பெற்றுள்ளேன். இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல. இது போராட்டத்திற்கான நேரம். பாஜக-வின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்.
இவ்வாறு அதிஷி தெரிவித்தார்.
அதிஷ் கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ரமேஷ் விதுரியும், காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும் போட்டியிட்டனர்.