பெண்ணை அவமதித்தால்.. 'பாஞ்சாலி' படத்தை பகிர்ந்து ஆம் ஆத்மி தோல்வியை விமர்சித்த ஸ்வாதி மாலிவால்
- 22 இடங்களை மட்டுமே பெற்று 10 ஆண்டுகாலமாக தக்க வைத்த ஆட்சியை கைநழுவ விட்டுள்ளது.
- கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார் என்பவரால் தாக்கப்பட்டதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆம் ஆதமி மாநிலங்களவை எம்.பியாக இருந்த ஸ்வாதி மாலிவால் கடந்த வருடம் மே மாதம் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார் என்பவரால் தாக்கப்பட்டதாக பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து கெஜ்ரிவால் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலின்போது யமுனை நதி மாசுபாட்டைக் கண்டித்து கெஜ்ரிவால் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீசால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி பாஜகவிடம் தோல்வியடைந்துள்ள நிலையில் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன்மூலம் 27 ஆண்டுகள் கழித்து பாஜக டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைகிறது.
கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே பெற்று 10 ஆண்டுகாலமாக தக்க வைத்த ஆட்சியை கைநழுவ விட்டுள்ளது. புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலும் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சர்மாவிடம் தோற்றார்.
இந்நிலையில் மகாபாரத கதையில் திரௌபதியை அவமதிக்க, கௌவர்கள் அவரை துகில் உரியும் சித்திரத்தை ஸ்வாதி மாலிவால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் தேர்தல் முடிவுகள் குறித்து பேட்டியளித்த ஸ்வாதி மாலிவால், பெண்ணுக்கு ஏதாவது தவறு நடந்தால், அதைச் செய்தவர்களை கடவுள் தண்டித்திருக்கிறார். நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் தெருக்களின் நிலை போன்ற பிரச்சினைகளால்தான் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை இழந்தார்.
அவர்கள் (ஆம் ஆத்மி) பொய் சொல்ல முடியும் என்றும் மக்கள் அவர்களை நம்புவார்கள் என்றும் நினைக்கிறார்கள். மக்கள் சொல்வதைச் செய்ய வேண்டும், ஆனால் ஆம் ஆத்மி தலைமை அதை மறந்துவிட்டு, அவர்கள் முன்பு சொன்னதுக்கு மாறாக செயல்படுகிறது. பாஜகவை நான் வாழ்த்துகிறேன். மக்கள் நம்பிக்கையுடன் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். அதை நிறைவேற்ற அவர்கள் பாடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.