பெங்களூருவில் புதிய விமான நிலையம் அமைக்க 2 இடங்கள் தேர்வு
- ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- பெங்களூருவில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் உள்ள நெலமங்களா, கனகபுரா ஆகிய இடங்களில் 4400 ஏக்கர் நிலங்களை தேர்வு செய்து உள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமானம் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கும் நேரடியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருக்கு அருகில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அமைந்துள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் இங்கு வந்து செல்பவர்கள் பெங்களூரு விமான நிலையத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதுதவிர ஓசூர் பகுதியில் சாகுபடி செய்யப்படும் ரோஜா மலர்கள் மற்றும் கொய்மலர்கள் உலகின் பலநாடுகளுக்கும் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதையடுத்து ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலை பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக அரசும் பெங்களூருவில் 2-வதாக புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பெங்களூருவில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் உள்ள நெலமங்களா, கனகபுரா ஆகிய இடங்களில் 4400 ஏக்கர் நிலங்களை தேர்வு செய்து உள்ளனர்.
பெங்களூரு சர்வதேச விமான நிலையம் 2033-ம் ஆண்டுக்குள் பயணிகள் வருகை 90 மில்லியனை எட்டும் என்று கணித்துள்ளதால் புதிய விமான நிலையத்துக்கு இடம் தேர்வு செய்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் பெங்களூரு தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு நெலமங்களா, கனகபுரா பகுதியில் விமான நிலையம் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.