இந்தியா (National)

திருப்பதி லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடு இன்றும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை

Published On 2024-09-21 07:36 GMT   |   Update On 2024-09-21 07:36 GMT
  • திருப்பதி லட்டு தொடர்பாக விரிவான விளக்கம் தர ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
  • எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் நடந்த டெண்டர் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

அமராவதி:

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமான லட்டு உலகப்புகழ் பெற்றதாகும்.

300 ஆண்டுகள் பாரம்பரிய சிறப்பு வாய்ந்த திருப்பதி லட்டுகள் ஆலயத்தின் அருகில் உள்ள பிரத்யேகமான மடப்பள்ளியில் சுத்தமான நெய் மற்றும் பொருட்களால் தயாரித்து வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 முதல் 15 கோடி லட்டுகள் வரை திருப்பதி ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பதி ஆலயத்தில் தயாரிக்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு சேர்ந்து இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை லட்டுகளில் கலந்து இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவே இந்த தகவலை வெளியிட்டு இருப்பதால் நாடு முழுவதும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தரமற்ற நெய்யில் விலங்குகளின் கொழுப்பை கலந்து திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தன்மையை முந்தைய ஆட்சியாளர்களான ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி சீரழித்து விட்டதாக சந்திரபாபு நாயுடு முக்கிய குற்றச்சாட்டை வெளியிட்டு இருந்தார்.

அதோடு திருப்பதி ஆலயத்தில் தயாரிக்கப்படும் லட்டுகளில் உள்ள கலவைகளை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார். அதன்படி குஜராத் ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது. 5 கட்டங்களாக சோதனை நடந்தது.

அப்போது திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலை யிட்டுள்ளது.

திருப்பதி லட்டு தொடர்பாக விரிவான விளக்கம் தர ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

அதன் அடிப்படையில் ஆந்திர மாநில அரசு திருப்பதி லட்டுகள் தொடர்பாக விரிவான அறிக்கை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று (சனிக்கிழமை) காலை அமராவதியில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் ஆந்திர மாநில மந்திரிகள், அனைத்து துறை அதிகாரிகள் ஆகம வைதீக அமைப்பு நிர்வாகிகள் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நெய் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த தெலுங்கு தேசம் ஜனசேனா பா.ஜ.க. கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் தனி குழு ஏற்படுத்தப்படுகிறது.

இந்த எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் நடந்த டெண்டர் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். இந்த குழுவினர் தலைமையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிடம் வழங்கப்படும். இந்த ஆலோசனைக்கு பிறகு திருப்பதி லட்டு சர்ச்சை குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே சந்திரபாபு நாயுடு இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த அதிரடிகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார். திருப்பதி ஆலய அர்ச்சகர்களிடம் தொடர்பு கொண்டு பேசினார். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடமும் நேற்றும் இன்றும் ஆலோசனை நடத்தினார்.

லட்டுகள் தயாரிக்க வாங்கப்படும் நெய் கொள்முதல் தொடர்பாக முழுமையான விளக்கமும், அறிக்கையும் தருமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். இதனால் திருப்பதி தேவஸ்தானத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் எவ்வளவு டெண்டர் கோரப்பட்டு நெய் வாங்கப்பட்டது. எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டன. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் மற்ற மூலப்பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்த முழு தகவல்களை புள்ளி விவரத்துடன் தெரிவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஏழுமலையான் கோவிலின் புனிதத்தை காக்கும் விஷயத்தில் ஆகம வைதிக தார்மீக அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

Tags:    

Similar News