null
அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது - தர்மேந்திர பிரதான்
- இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
- முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்தி எதிர்ப்பு இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தி திணிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவு இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
அவரது பதிவில், "மற்ற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதரிகளே, சகோதரர்களே,
இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? போஜ்புரி, மைதிலி, அவதி, பிரஜ், பண்டேலி, கர்வாலி, குமாவோனி, மகாஹி, மார்வாரி, மால்வி, சத்திஸ்கர், சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, கூர்மாலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பல இப்போது உயிர்வாழ்வதற்காக மூச்சுத் திணறுகின்றன.
ஒற்றைக்கல் (monolithic) இந்தி அடையாளத்திற்கான அழுத்தம் பண்டைய தாய்மொழிகளைக் கொல்கிறது. உ.பி. மற்றும் பீகார் ஒருபோதும் வெறும் "இந்தி இதயப்பகுதிகள்" அல்ல. அவற்றின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள்.
இது எங்கே முடிகிறது என்பது நமக்குத் தெரியும் என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது. தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இந்தியை திணிக்காத தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்ப்பதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளன.
புதிய கல்விக்கொள்கை 2020 இல் இந்தி மட்டுமே இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கூறியதில்லை. தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்கப்படும். தமிழகத்தில் தமிழில் தான் கற்பிக்கப்படும் என்றுதான் சொன்னோம்.
சிலரின் அரசியல் ஆசைகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. புதிய கல்விக்கொள்கை 2020 இந்தியாவின் பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்துகிறது. அதில், இந்தி , தமிழ், ஒடியா, பஞ்சாபி உட்பட எல்லா மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் உண்டு. தமிழகத்தில் அரசியல் காரணங்களால் இதை சிலர் எதிர்க்கிறார்கள்" என்று தெரிவித்தார்.