'கூகுள் மேப்' பார்த்து காரில் சென்ற சுற்றுலா பயணிகள் நடுக்காட்டில் சிக்கி தவிப்பு- போலீசார் மீட்டனர்
- நீண்ட தூரம் சென்றும் நெடுஞ்சாலை வராமல், ஒரே வனப்பகுதியாக இருப்பதை அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- 4 பேரும் காருடன் பெலகாவி மாவட்டம் கானாபுரா தாலுகா மதிகுன்சி வனப்பகுதியில் சிக்கி தவித்தது தெரியவந்தது.
'கூகுள் மேப்' பார்த்து வாகனங்களில் செல்வோர் திக்குதெரியாமல் வழிதவறி செல்லும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் உத்தரபிரதேசத்தில் 'கூகுள் மேப்' பார்த்து பயணித்த கார் புதியதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தில் இருந்து கீழே பாய்ந்தது. இதில் 3 பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
அதுபோல் கர்நாடகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பக்தர், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டரில் 'கூகுள் மேப்' பார்த்து சென்ற போது நடுக்காட்டில் சேற்றில் சிக்கி தவித்தார். அவரை போலீசார் மீட்டனர்.
அந்த வரிசையில் 'கூகுள் மேப்' பார்த்து காரில் சென்ற ஒரே குடும்பத்தில் 4 பேர் நடுக்காட்டில் சிக்கி தவித்த சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு கோவாவுக்கு சுற்றுலா செல்ல காரில் புறப்பட்டு பெலகாவி வழியாக வந்தனர். அதில் பெண்கள் உள்பட 4 பேர் இருந்தனர். அவர்களுக்கு கோவாவுக்கு செல்ல வழி தெரியவில்லை. இதனால் அவர்கள் கூகுள் மேப்பில் வழிபார்த்து கோவா நோக்கி காரில் சென்றனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் கூகுள் மேப் தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டு அவர்களுக்கு தவறான வழியை கூறியுள்ளது. ஆனால் இதை அறியாத அவர்கள் காரை வனப்பகுதி வழியாக ஓட்டிச் சென்றுள்ளனர். நீண்ட தூரம் சென்றும் நெடுஞ்சாலை வராமல், ஒரே வனப்பகுதியாக இருப்பதை அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வனப்பகுதிக்குள் 10 கிலோ மீட்டர் தூரம் சென்றுள்ளனர்.
நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் சாலை தெரியாததால் அவர்களால் மீண்டும் வெளியே வர முடியவில்லை. இதன் காரணமாக திக்கு தெரியாமல் அவர்கள் நடுக்காட்டில் சிக்கி தவித்தனர்.
இதையடுத்து அவர்கள் பெலகாவி போலீஸ் உதவி மையத்துக்கு போன் செய்து சம்பவம் பற்றி கூறி, தங்களுக்கு உதவ கோரினர். அதன்பேரில் போலீசார் ஒரு காரில் அவர்களை தேடி சென்றனர். அப்போது 4 பேரும் காருடன் பெலகாவி மாவட்டம் கானாபுரா தாலுகா மதிகுன்சி வனப்பகுதியில் சிக்கி தவித்தது தெரியவந்தது.
உடனே அவர்களை தேடி அந்த வனப்பகுதிக்குள் போலீசார் தேடிச் சென்றனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அவர்கள் காரை போலீசார் நேற்று காலை தான் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை மீட்டு கோவா செல்லும் சாலைக்கு அழைத்து வந்தனர். அவர்கள், போலீசாருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். அதன் பிறகு ஆந்திரா சுற்றுலா பயணிகள் அதே காரில் கோவா நோக்கி சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.