VIDEO: வரதட்சணை கொடுமை வழக்கில் கைது செய்ய வந்த போலீஸ்.. வழிமறித்து சரமாரியாக தாக்கிய மக்கள்
- ஜிதேந்திர யாதவ் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் போலீசாரை தடுக்க முயன்றதால் கலவரமாக சூழல் ஏற்பட்டது.
- சம்பவத்தில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 3 அதிகாரிகள் காயமடைந்தனர்.
பீகாரில் வர தட்சணை வழக்கில் குற்றவாளியை கைது செய்ய சென்ற போலீசாரை தடுத்து உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள லஹேரியசராய் பகுதியில் உள்ள அபண்டா கிராமத்தில் வசிக்கும் ஜிதேந்திர யாதவை நீதிமன்ற பிடிவாரண்ட் படி கைது செய்ய நேற்று போலீஸ் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது.
அப்போது ஜிதேந்திர யாதவ் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் போலீசாரை தடுக்க முயன்றதால் கலவரமாக சூழல் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றில், ஒரு பெரிய கும்பல் காவல்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசி துப்பாக்கிகளை பறிக்க முயற்சிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர யாதவ் வீட்டிற்கு போலீசார் வருவதைத் தடுக்க, அவர்கள் பிரதான சாலையில் டயர்களை எரித்து மறிக்க முயன்றனர்.
சம்பவத்தில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 3 அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
போலீசாரின் கூற்றுப்படி, தாக்குதலை நிறுத்தவும் கூட்டத்தை கலைக்கவும் கூடுதல் பாதுகாப்பு படையினர் குழு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து பேசிய தர்பங்கா துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி (SDPO) அமித் குமார், உள்ளூர் மக்கள் கூட்டத்தில் குழந்தைகள் இருந்தனர்.
அதனால் நாங்கள் அவர்களை நோக்கி அதிகம் சுடவில்லை. அவர்கள் பாதுகாப்புப் பணியாளர்கள் மீது கற்களை வீசினர். இருப்பினும், லேசான சக்தியைப் பயன்படுத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று கூறினார்.
இதற்கிடையே கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ஜிதேந்திர யாதவ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.