டிரான்ஸ்ஃபார்மரை தூக்கிச் சென்ற திருடர்கள் - இருளில் தவிக்கும் கிராமம்
- கிராமம் பல வாரங்களாக இருளில் மூழ்கியுள்ளது.
- டிரான்ஸ்ஃபார்மர் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி திருடப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலத்தின் பைரேலியில் கிராமத்திற்கு மின் விநியோகம் செய்து வந்த டிரான்ஸ்ஃபார்மர் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டிரான்ஸ்ஃபார்மர் திருடப்பட்டதை அடுத்து சோராகா கிராமம் பல வாரங்களாக இருளில் மூழ்கியுள்ளது.
ஒட்டுமொத்த கிராமத்திற்கும் மின்சாரம் வினியோகம் செய்துவந்த 240 கிலோவாட் டிரான்ஸ்ஃபார்மர் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி திருடப்பட்டது தெரியவந்துள்ளது. டிரான்ஸ்ஃபார்மர் முழுக்க வெட்டி எடுக்கப்பட்டு அதில் உள்ள மறுவிற்பனைக்கு உகந்த பொருட்கள் அனைத்தும் எடுத்து செல்லப்பட்டது. இதில் செம்பு வயர்கள், மற்ற இரும்பு பொருட்கள் அடங்கும்.
டிரான்ஸ்ஃபார்மர் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், மின் வினியோகம் சார்ந்த விவகாரம் என்பதால், மின்துறை சார்ந்தவர்கள் உதவியின்றி இந்த திருட்டு சம்பவம் அரங்கேறி இருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.
திருட்டு சம்பவம் குறித்து சி.சி.டி.வி. வீடியோ மற்றும் திருட்டு சம்பவம் அரங்கேறிய பகுதியில் செல்போன் நடவடிக்கை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விரைவில், திருடியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.