இந்தியா

பெண் டாக்டர் கொலையை கண்டித்து கொல்கத்தாவில் வன்முறை: போலீசார் தடியடி

Published On 2024-08-15 07:44 GMT   |   Update On 2024-08-15 07:44 GMT
  • நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
  • ஆஸ்பத்திரி பகுதியில் பதட்டம் நிலவியது.

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ந்தேதி இரவு பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் சஞ்சய் ராய் போலீசாரிடம் சிக்கினார்.

இந்த கொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சந்தீப்கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே பயிற்சி பெண் டாக்டர் கொலையை கண்டித்து நேற்று நள்ளிரவில் போராட்டம் நீடித்தது. அப்போது திடீரென இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை வார்டுக்குள் புகுந்த சிலர் அங்கிருந்த பொருட்கள் உட்பட வார்டு முழுவதையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

ஆஸ்பத்திரியின் வளாகத்திற்குள்ளும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

அப்போது கும்பல் கற்களை வீசி தாக்கியதில் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் ஆஸ்பத்திரிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளுக்கு கும்பல் தீ வைத்து எரித்தது. 2 போலீஸ் வாகனங்களையும் கும்பல் அடித்து நொறுக்கியது.

இதனால் ஆஸ்பத்திரி பகுதியில் பதட்டம் நிலவியது. சம்பவ இடத்திற்கு கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், அடையாளம் தெரியாத கும்பல் திடீரென மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை தடுத்து நிறுத்த முயன்றோம். ஆனால் முடியாமல் போனதால் கும்பல் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து சூறையாடியது என்றனர்.

இதுகுறித்து பா.ஜ.க. மாநில தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் மருத்துவமனைக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு காவல் துறையினர் பாதுகாப்பான பாதை வழங்கி உள்ளனர் என குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கூறுகையில், வன்முறைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு போலீஸ் கமிஷனரை வலியுறுத்தி உள்ளோம் என்றார். 

Tags:    

Similar News