திருப்பதி தரிசனத்திற்கு ஏன் பிச்சை எடுக்க வேண்டும்- ரேவந்த் ரெட்டி
- தெலுங்கானாவில் சிவன் கோவில்களுக்கு என்ன பஞ்சமா உள்ளது.
- தெலுங்கானா அற்புதமான கலாச்சார பாரம்பரியம் கொண்டது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிபாரிசு கடிதங்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
இதற்கு தெலுங்கானா மாநில அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் ரவீந்திர பாரதியில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க செல்லும் ஒவ்வொரு முறையும் நமது எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து கடிதங்கள் மூலம் தரிசனம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
தரிசனத்திற்காக நாம் ஏன் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் பிச்சை எடுக்க வேண்டும். அவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் என்றால். நமக்கு யாதாரி குட்டா தேவஸ்தானம் உள்ளது.
பத்ராசலத்தில் ராமர் இருக்கிறார். தெலுங்கானாவில் சிவன் கோவில்களுக்கு என்ன பஞ்சமா உள்ளது. தெலுங்கானா அற்புதமான கலாச்சார பாரம்பரியம் கொண்டது.
நாம் நமது பிராந்தியங்களை அபிவிருத்தி செய்ய தெலுங்கானாவில் உள்ள கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியின் இந்த பரபரப்பான பேச்சு ஏழுமலையானின் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.