மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. பேராசிரியர் - 72 மணி நேரத்திற்கு பிறகு கைது
- கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- கடந்த சனிக்கிழமை பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக (HOD) உள்ளவர் ரஜ்னீஷ் குமார் (59 வயது).
இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை வீடியோ எடுத்தும் வந்துள்ளார். இதுதொடர்பாக நிர்வாகத்திடம் உள்விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் அவர் குற்றமற்றவர் என்று கூறிவிட்டது.
இதனையடுத்து கடந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் (NCW), உயர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் ரஜ்னீஷ் குமார் மீது பாதிக்கப்பட்டவர் பெயர் குறிப்பிடப்படாமல் பாலியல் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் ஆபாசமான நிலையில் இருப்பதைக் காட்டும் பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் 13 அன்று தான் அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 64 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 68 (அதிகாரத்தில் உள்ள ஒருவரால் பாலியல் வல்லுறவு), மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 (சைபர் குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் ரஜ்னீஸ் குமார் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை அறிந்ததும், ரஜ்னீஷ் குமார் தலைமறைவானார்.
இந்நிலையில் மாணவிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட புவியியல் பேராசிரியரை 72 மணி நேரத்திற்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.