இந்தியா

உலக புகழ்பெற்ற இந்திய கலைஞர் எம்.எப். ஹூசைனின் ஓவியம் ரூ.119 கோடிக்கு ஏலம்

Published On 2025-03-21 11:08 IST   |   Update On 2025-03-21 11:08:00 IST
  • கடந்த 2023-ம் ஆண்டு மும்பையில் நடந்த ஏலத்தில் இது 61.8 கோடிக்கு ஏலம் போனது.
  • எம்.எப்.ஹூசைனின் படைப்புக்கு மிகப்பெரிய மதிப்பை அமைப்பதில் இது ஒரு பகுதியாக இருந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

புதுடெல்லி:

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் ஓவிய கலைஞர் எம்.எப்.ஹூசைன். இந்தியாவின் பிகாசோ என போற்றப்படும் உலக புகழ்பெற்ற இவர் உலகம் முழுவதும் கலை மற்றும் உரையாடல்களை ஊக்குவிக்கும் இந்தியாவின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

இவர் கடந்த 1954-ம் ஆண்டு வரைந்த பெயரிடப்படாத ஓவியம் (கிராம யாத்திரை) என்ற ஓவியம் அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற கிறிஸ்டி ஏலத்தில் பங்கேற்றது. சுதந்திர இந்தியாவின் பன்முக தன்மை மற்றும் சுறுசுறுப்பை கொண்டாடும் எம்.எப்.ஹூசைனி படைப்பாக கருதப்படும் இந்த ஓவியம் 13.8 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.119 கோடி) ஏலம் போய் உள்ளது. இது முந்தைய சாதனையான அமிர்தா ஷெர்-கில்லின் தி ஸ்டோரி டெல்லர் படத்தை விட கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாகும்.

 

ரூ.119 கோடிக்கு ஏலம்போன ஓவியம்.

கடந்த 2023-ம் ஆண்டு மும்பையில் நடந்த ஏலத்தில் இது 61.8 கோடிக்கு ஏலம் போனது. இந்த சாதனையை தற்போது எம்.எப்.ஹூசைனின் படைப்பு முறியடித்துள்ளது.

ஏலத்தை நடத்திய நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், எம்.எப்.ஹூசைனின் படைப்புக்கு மிகப்பெரிய மதிப்பை அமைப்பதில் இது ஒரு பகுதியாக இருந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இது ஒரு முக்கியமான தருணம் என்றார்.

இந்த ஓவியத்தை இந்தியாவின் முக்கிய கலை சேகரிப்பாளரான கிரன் நாடாரின் கலை அருங்காட்சியகம் (கே.என்.எம்.ஏ.) ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆர்.பி.ஜி. நிறுவன தலைவரும், கலை சேகரிப்பாளருமான ஹர்ஸ்கோயங்கா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், எம்.எப்.ஹூசைனின் கிராம் யாத்திரா ஓவியம் ரூ.100 கோடி தடையை உடைத்து கிரன் நாடாருக்கு 13.8 மில்லியன் டாலருக்கு விற்கப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News