தேசிய கீதத்தை அவமதித்த விவகாரம் - நிதிஷ் குமார் பதவி விலகக் கோரி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி
- நிதிஷ் குமாரின் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
- அவையின் செயல்பாடுகள் பத்து நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், நேற்று கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது சிரித்து பேசிக் கொண்டு இருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பலரும் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று காலை பீகார் சட்டமன்றம் கூடியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அவை தொடங்கியதும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள் முதலமைச்சர் நிதிஷ் குமார் பதவி விலக வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து அவையின் செயல்பாடுகள் பத்து நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.
அவை தொடங்கியது முதலே எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததை அடுத்து சட்டசபை கூடிய எட்டு நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டன. எனினும், சபையில் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சியினர் முகப்பு பகுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர்.
பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பீகாரில் சட்டசபை நடவடிக்கைகள் முதல் பாதி வரை ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இது குறித்து அம்மமாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அவையில் கூறும் போது, நாங்கள் தனிப்பட்ட முறையில் முதலமைச்சரை மதிக்கிறோம், ஆனால் யாராவது தேசிய கீதத்தை அவமதித்தால், இந்துஸ்தான் எந்த விலையிலும் அதை பொறுத்துக்கொள்ளாது," என்றார்.
அப்போது குறுக்கிட்ட சட்டப்பேரவை சபாநாயகர், "பூஜ்ஜிய நேரத்தில் இந்த விவகாரம் குறித்து பேசப்படும்," என்று கூறினார். தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பேச நேரம் கோரினார். ஆனால் சபாநாயகர் நேரம் கொடுக்க மறுத்துவிட்டார். இதன் பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் கூச்சலிடத் தொடங்கினர்.
தொடர்ந்து அவையை நடத்த முற்பட்ட போதிலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டு வந்ததை அடுத்து, சபாநாயகர் சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.