கேரளாவில் பா.ஐ.க. பிரமுகர் சுட்டுக்கொலை: துப்பாக்கியுடன் கட்டிட ஒப்பந்ததாரர் கைது
- அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா விசாரணை.
- துப்பாக்கியை உரிமம் பெற்று வைத்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் புனியம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது49). சரக்கு ஆட்டோ டிரைவரான இவர், பா.ஜ.க.வில் உள்ளூர் நிர்வாகியாக இருக்கிறார்.
அவருடைய நண்பர் சந்தோஷ். கட்டிட ஒப்பந்த தாரரான அவர் பல புதிய கட்டிடங்களை கட்டி வந்துள்ளார். அவ்வாறு மாதமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டு கட்டிடத்திற்கு ராதா கிருஷ்ணனை நேற்று இரவு அழைத்துச் சென்றார்.
அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது சந்தோஷ், தான் வைத்திருந்த துப்பாக்கியால் ராதாகிருஷ்ணனை சுட்டார். இதில் அவரது மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.
இந்தநிலையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள், சத்தம் வந்த கட்டிடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு ராதாகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். சந்தோஷ் கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருந்தார்.
உயிருக்கு போராடிய ராதாகிருஷ்ணனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். ராதாகிருஷ்ணன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சந்தோசை கைது செய்தனர்.
அப்போது அவர் குடி போதையில் இருந்துள்ளார். இதனால் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ராதா கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின் றனர்.
சந்தோஷ் எதற்காக ராதாகிருஷ்ணனை துப்பாக் கியால் சுட்டு கொன்றார்? என்பது உடனடியாக தெரிய வில்லை. அவர் பா.ஜ.க.வில் இருப்பதால் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால் முதற்கட்ட விசா ரணையில் அவரது கொலைக்கு அரசியல் காரணம் இல்லை என்பது தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் கொலைக்காக காரணம் குறித்து சந்தோசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சந்தோஷ் வைத்திருந்த துப்பாக்கி காட்டு பன்றிகளை சுடுவதற்கு பயன்படுத்தக்கூடியது ஆகும். அவர் காட்டுப்பன்றிகளை சுடும் குழுவில் இருப்பதால், துப்பாக்கியை உரிமம் பெற்று வைத்துள்ளார். அதனை பயன்படுத்தி நண்பரான ராதாகிருஷ்ணனை சந்தோஷ் கொலை செய்து விட்டார்.
பா.ஜ.க. பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கண்ணூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.