உணவு தேடி வந்தபோது கிணற்றுக்குள் விழுந்த காட்டு யானை
- கிணற்றுக்குள் விழுந்து கிடந்த யானையை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
- யானையை மீட்கும் பணியில் 60 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கரிக்கோடு அருகே உள் ஊருங்காட்டேரி பகுதியை சேர்ந்த சன்னி என்பவரின் தோட்டத்தில் இருக்கும் கிணற்றுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டுயானை ஒன்று தவறி விழுந்துவிட்டது.
அந்த கிணறு 25 அடி ஆழம் என்பதால் யானையால் மேலே வரமுடியவில்லை. இதுகுறித்து மலப்புரம் வனத்ததுறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், கிணற்றுக்குள் விழுந்து கிடந்த யானையை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதே நேரத்தல் அந்த பகுதி மக்கள் வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். இதனால் யானையை மீட்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை வனத்துறையினர் சமரசம் செய்து அனுப்பி விட்டு மீட்பு பணியை தொடர்ந்தனர்.
யானையை மீட்கும் பணியில் 60 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் ஈடுபட்டனர். யானையை கிணற்றுக்கு வெளியே கொண்டு வருதற்காக கிணற்றின் அருகில் மிகப் பெரிய குழி தோண்டப்பட்டது. அதன் வழியாக யானை வெளியே கொண்டு வரப்பட்டது.
சுமார் 20 மணி நேரத்திற்கு பிறகு கிணற்றுக்குள் இருந்து காட்டு யானை மீட்கப்பட்டது. அந்த யானையை வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.