இனி இவருக்கு பதில் இவர்.. கர்நாடக முதல்வராகும் டி.கே.சிவகுமார்? - சித்தராமையா சொல்வது என்ன?
- கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
- தற்போது சித்தராமையாவின் 30 மாத பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டிகே சிவகுமார் பதவியேற்றனர்.
சிவகுமார் முதல்வர் ஆக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தொடக்கத்திலுருந்தே வலியறுத்தி வருகின்றனர். 2023 தேர்தலில் வென்ற சமயத்தில் டிகே சிவகுமார் மற்றும் ஆதரவாளர்களின் பிடிவாதம் காங்கிரஸ் மேலிடத்தால் சரிகட்டப்பட்டது.
தேர்தலுக்குப் பிறகு, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும் மீதி இரண்டரை ஆண்டுகள் டிகே சிவகுமாரும் முதல்வர் பதவியில் இருப்பார்கள் என்று என்று முடிவெடுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
தற்போது சித்தராமையாவின் 30 மாத பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், முதல்வர் பொறுப்பு சிவகுமாரிடம் ஒப்படைக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
டிகே சிவகுமாரின் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை செய்து வருகின்றனர் என்றும் சித்தராமையா ஆதரவாளர்கள் தங்கள் தலைவரே பதவியில் இருக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, "இறுதியில் உயர்நிலைக் குழு [காங்கிரஸ்] முடிவெடுக்கும்" என்று சூசகமாக தெரிவித்துள்ளார். மறுபுறம், டி.கே.சிவகுமாரும் கட்சியின் முடிவுகளுக்கு முற்றிலும் விசுவாசமாக இருப்பதாக சமீபத்தில் பேசியிருந்தார்.
சிவக்குமார் மற்றும் சித்தராமையா இருவரின் ஆதரவாளர்களும் தத்தமது தலைவர்களுக்கு ஆதரவாக விடாபிடியாக உள்ளதால் கட்சிக்குள் பூசல் ஏற்பட்டுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முடா முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.