குளிக்க சொல்லும் யோகி ஆதித்யநாத்.. குடிக்க சொல்லும் அகிலேஷ்.. பெரும் பிரச்சனையான யமுனை!
- அவர் தனது அமைச்சர்களுடன் யமுனையில் சென்று குளிக்க முடியுமா?
- கெஜ்ரிவாளுக்கு சவால் விடுத்த யோகி ஆதித்யநாத்துக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்
டெல்லியில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியைப் பிடிக்க அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை நிலவி வருகிறது.
கெஜ்ரிவால், ராகுல் காந்தி ஆகியோர் தத்தமது கட்சிகளுக்காகச் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாஜக அண்டை மாநிலமாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை டெல்லி களத்தில் இறக்கிவிட்டுள்ளது.
டெல்லியின் கிராரி பகுதியில் தனது முதல் பேரணியில் நேற்று உரையாற்றிய யோகி ஆதித்யநாத், " ஒரு முதலமைச்சராக நானும் எனது அமைச்சர்களும் பிரயாக்ராஜில் [மகா கும்பமேளா] [திரிவேணி] சங்கத்தில் நீராட முடிந்தது.
அதே போல டெல்லியில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை நான் கேட்க விரும்புகிறேன், அவர் தனது அமைச்சர்களுடன் யமுனையில் சென்று குளிக்க முடியுமா? என்று சவால் விடுத்தார். புனித யமுனையை அழுக்கு வாய்க்காலாக மாற்றி கெஜ்ரிவால் பாவம் செய்துள்ளார் என யோகி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் கெஜ்ரிவாளுக்கு சவால் விடுத்த யோகி ஆதித்யநாத்துக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மற்றவர்களுக்கு சவால் விடுபவர்கள் தங்கள் மாநிலத்தில் [உத்தரப் பிரதேசத்தில்] உள்ள மதுரா வழியாக பாயும் யமுனை நீரை குடிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் .
கடந்த சில ஆண்டுகளாக டெல்லியில் யமுனை முக்கிய அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. அதன் கடுமையான மாசுபாடு காரணமாக அதை சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும் என்ற குரல்கள் வலுப்பெற்று வருகிறது.
முன்னதாக கெஜ்ரிவால் யமுனையை சுத்தம் செய்யவும், நதிகளின் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்கவும் பல வாக்குறுதிகளை அளித்ததும் குறிப்பிடத்தக்கது.