அதானி நிறுவனத்துடன் மின் உற்பத்தி ஒப்பந்தத்தை ரத்து செய்தது இலங்கை: 6% சரிந்த பங்கு விலை
- மன்னார் மற்றும் பூநகரி ஆகிய இரண்டு இடங்களில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் கட்டுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
- தேர்தலின்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அனுர குமார திசா நாயக வாக்குறுதி அளித்திருந்தார்.
அதானியின் கிரீன் எனெர்ஜி நிறுவனத்துடன் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான 440 மில்லியன் டாலர் அளவிலான ஒப்பந்தத்தை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது. இதனால் பங்குச் சந்தையில் அதானியின் கிரீன் எனெர்ஜி பங்கின் விலை 6% சரிவை சந்தித்துள்ளது.
484 மெகாவாட் அதானி காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தம், சந்தை விலையை விட 70 சதவீதம் அதிக விலைக்கு வழங்குவதற்கான ரணில் விக்கிரமசிங்கேயின் அமைச்சரவை எடுத்த முடிவை ஜனாதிபதி அனுர குமார திசா நாயக தலைமையிலான அமைச்சரவையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதானியின் கிரீன் எனெர்ஜி நிறுவனத்திற்கு மன்னார் மற்றும் பூநகரி ஆகிய இரண்டு இடங்களில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் கட்டுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. தற்போது அந்த ஒப்பந்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலின்போது அனுர குமார திசா நாயக இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். காற்றாலை மின்சார உற்பத்தியை மேம்படுத்த சர்வதேச டெண்டர் கோரப்படும் என உறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைச்சரவை கடந்த மாதம் 30-ந்தேதி ஒப்பந்தத்தை திரும்ப பெற முடிவு செய்தது. கடந்த ஆண்டு மே மாதம் அதானி நிறுவனத்துடன் இலங்கை அரசு ஒப்பந்தம் போட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2025 நிதியாண்டின் 3-வது காலாண்டில் கடந்த ஆண்டை விட 2.33 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தது. கடந்த நிதியாண்டில் 2,311 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய நிலையில் 2025-ல் 2365 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக தெரிவித்திருந்தது.