இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ், நிஃப்டி
- டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, டெக் மஹிந்திரா பங்குகள் சரிவு.
- ரிலையன்ஸ், நெஸ்லே, ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிட், சொமேட்டோ பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்று 77,042.82 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 77,069.19 புள்ளிகளில் வர்த்தம் தொடங்கியது. அதன்பின் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இறுதியாக 423.49 புள்ளிகள் சரிந்து 76,619.33 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று அதிகபட்சமாக 77,069.19 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 76,263.29 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
நிஃப்டி
அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டியும் இன்று 108.60 புள்ளிகள் குறைந்த வர்த்தகம் நிறைவடைந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 23,311.80 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் இன்று காலை
23,277.10 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 23,292.10 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 23,100.35 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 108.60 புள்ளிகள் சரிந்து 23,203.20 புள்ளிகளில் வர்த்தகமானது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேறுதல், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய பங்குச் சந்தை சரிவை கண்டு வருவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்போசிஸ் நேற்று 3-வது காலாண்டில் வருவாய் 11.46 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையிலும் அதன் பங்கு 6 சதவீதம் சரிந்துள்ளது.
ஐ.டி. பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருவது இன்றைய மார்க்கெட் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
வீழ்ச்சி கண்ட பங்குகள்
ஆக்சிஸ் வங்கியின் பங்கு 4 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது. கோடக் மஹேந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் பஜாஜ் பின்சர்வ் ஆகிய பங்குகளில் பெரிய சரிவை சந்தித்துள்ளன.
உயர்வை சந்தித்த பங்குகள்
டிசம்பர் மாதம் காலாண்டில் நிகர லாபம் 7.4 சதவீதம் என அறிவித்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்கு 2.50 சதவீதம் உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ், நெஸ்லே, ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிட், சொமேட்டோ பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.