14, 15-ந்தேதிகளில் சபரிமலைக்கு வருவதை பெண்கள், குழந்தைகள் தவிர்க்க வேண்டும்: தேவசம்போர்டு
- மண்டல பூஜை காலத்தை போன்றே, மகரவிளக்கு பூஜை காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவிலேயே இருக்கிறது.
- 10-ந்தேதி முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்படுகிறது.
திருவனந்தபுரம்:
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
மண்டல பூஜை காலத்தை போன்றே, மகரவிளக்கு பூஜை காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவிலேயே இருக்கிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 10 முதல் 15 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.
பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக கண்காணிப்பு பணியில் போலீசாரும், தேவசம்போர்டு தன்னார்வ தொண்டர்களும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மகரவிளக்கு பூஜையன்று பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று திருவிதாங்கோடு தேவசம்போர்டிடம் போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில் மகரவிளக்கு பூஜை நடைபெறும் வருகிற 15-ந்தேதி மற்றும் அதற்கு முந்தைய தினமான 14-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 14-ந்தேதி மெய்நிகர் வரிசை ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், 15-ந்தேதி 40 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 10-ந்தேதி முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன முன்பதிவு வழக்கம் போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அது மட்டுமின்றி 14 மற்றும் 15 தேதிகளில் சபரிமலைக்கு வருவதை பெண்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என்று தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.