புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராகும் காங்கிரஸ்
- வைத்திலிங்கம் எம்.பி. வெற்றி வாய்ப்புள்ளவர்களை தேர்வு செய்வது, நகரம் மற்றும் கிராமங்களில் கட்சியை வளர்ப்பது என தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
- நாராயணசாமி ராஜ்பவன், காமராஜர் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளை குறிவைத்து தேர்தல் முன்கள பணிகளில் தனது ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் முதலமைச்சராக நாராயணசாமி பதவியேற்று 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆட்சியில் இருந்தார்.
சட்டசபை தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பாகவே இவரது ஆட்சி கவிழ்ந்ததால் 5 ஆண்டுகள் முற்று பெறாமல் ஆட்சி காலம் முடிவடைந்தது.
அடுத்து நடந்த 2021 சட்டசபை தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிடாமல் தேர்தல் பணியாற்றினார். இந்த தேர்தலில், மாகி மற்றும் லாஸ்பேட்டை ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
கூட்டணியில் போட்டியிட்ட தி.மு.க. 6 இடங்களில் வெற்றி பெற்று மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எதிர்க்கட்சித் தலைவரானார்.
இந்த காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று முதலமைச்சராக ரங்கசாமி பதவியில் இருந்து வருகிறார்.
காங்கிரஸ் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் நாராயணசாமி மீது சுமத்தப்பட்டதால் நாராயணசாமி இதற்கு பதில் கூறாமல் அமைதி காத்து வந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் எதிர்வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் அமர்த்த நாராயணசாமி தீவிர தேர்தல் பணியை தற்போதே தொடங்கி உள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. வெற்றி வாய்ப்புள்ளவர்களை தேர்வு செய்வது, நகரம் மற்றும் கிராமங்களில் கட்சியை வளர்ப்பது என தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
காரைக்காலில் முன்னாள் அமைச்சர்கள் ஏ.வி. சுப்பிரமணியன், கமலக்கண்ணன் ஆகியோர் தேர்தல் முன்கள பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று நாராயணசாமி தனக்கு ஆதரவாக கருதும் ராஜ்பவன், காமராஜர் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளை குறிவைத்து தேர்தல் முன்கள பணிகளில் தனது ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளார்.
மேலும் இளைஞர்களை குறி வைத்து நாராயணசாமியின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பேஜ்களில் நாராயணசாமி தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் வருகிற சட்டசபை தேர்தலில் நாராயணசாமி போட்டியிட்டு வென்று காட்ட மீண்டும் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.