புதுச்சேரி

புதுச்சேரியில் 12-ந்தேதி முதல் அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய உத்தரவு

Published On 2025-01-07 10:40 IST   |   Update On 2025-01-07 10:40:00 IST
  • இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் தவறாமல் ஹெல்மெட் அணிந்து பணிக்கு வர வேண்டும்.
  • ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால் வருகிற 12-ந் தேதி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு முன் மாதிரியாக போலீசார் மற்றும் அனைத்து அரசு துறை அரசு ஊழியர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய செய்ய வேண்டும் என போக்குவரத்து சீனியர் சூப்பிரண்டு பிரவீன்குமார் திரிபாதி நிர்வாக சீர்த்திருத்த துறைக்கு பரிந்துரை செய்திருந்தார்.

அதன் அடிப்படையில், நிர்வாக சீர்த்திருத்த துறை அனைத்து அரசு துறைகளுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை மிஷன் ஜீரோ திட்டத்தின் கீழ் உயிரிழப்பினை தடுக்க வருகிற 12-ந் தேதி முதல் ஹெல்மெட் உபயோகத்தை கட்டாயமாக அமல்படுத்த உள்ளது. இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் தவறாமல் ஹெல்மெட் அணிந்து பணிக்கு வர வேண்டும். இது உங்களது தனிப்பட்ட பாதுகாப்பின் நலனுக்காக அறிவுறுத்தப்படுகிறது.

ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நிறுத்தி வைக்கப்படும்.ஹெல்மெட் அணியாதது குறித்து பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், சொசைட்டிகளின் பணிபுரிபவர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வரப்படும்.

அனைத்து நிர்வாக செயலாளர்கள், டி.ஜி.பி., துறைத் தலைவர்கள் இதனை உறுதி செய்து கடுமையான நடவடிக்கை எடுப்பர்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News