ஆன்லைன் மூலம் ரூ. 66 கோடி மோசடி செய்த வடமாநில கும்பல்- புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரிடம் சிக்கினர்
- புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினர்.
- அந்த வங்கி கணக்கில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அழகம்மை. டாக்டர். சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார்.
இவரிடம் கடந்த ஜூன் மாதம் மும்பை போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி, ஆன்லைன் மோசடி கும்பல் போன் செய்தது. அவர்கள் அழகம்மையின் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக கூறி, மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.27 லட்சத்தை பறித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினர்.
இதில் டாக்டர் அழகம்மை வங்கி கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்கு யாருடையது? என ஆய்வு செய்த போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த வங்கி கணக்கில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த வங்கியின் கணக்கினை முடக்கினர்.
இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்தது.மோசடி கும்பல் சமூக வலைதளங்களை பயன்படுத்தி தங்களை போலீஸ் அதிகாரி, தகவல் தொடர்பு துறை அலுவலக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பொய்களை கூறி அப்பாவி பொதுமக்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய மேற்கு வங்காளத்தை சேர்ந்த சஞ்ஜிப் தீப் (வயது 54) ராகேஷ் கோஷ் (39), அமித்சர்தார், (36) ஆகியோரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கில் ரூ.66 கோடியே 11 லட்சம் பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி புதுச்சேரி ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறப்பாக செயல்பட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் மற்றும் போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா பாராட்டினார்.