புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்காமல் இருக்க தடுப்புகள் அமைப்பு
- புத்தாண்டையொட்டி ஓட்டல்களில் மதுவிருந்துகள், ஆடல்பாடல் நடனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- அனைத்து ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றன.
புதுச்சேரி:
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சுற்றுலா பயணிகள் கடலில் இறங்காமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.
புத்தாண்டு பிறக்க இன்னும் 3 நாட்களே இருக்கிறது. இதையொட்டி புத்தாண்டை கொண்டாட புதுச்சேரி தயாராகி வருகிறது. இப்போதே ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இதன் காரணமாக அனைத்து ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றன. எங்கு பார்த்தாலும் வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் சுற்றி வருகின்றன.
இதற்கிடையே புத்தாண்டையொட்டி ஓட்டல்களில் மதுவிருந்துகள், ஆடல்பாடல் நடனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதியில் புத்தாண்டை கொண்டாட லட்சக்கணக்கானவர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். ஒயிட்டவுன் பகுதியில் வாகனங்கள் செல்வதை தடுக்க செஞ்சிசாலை, ஆம்பூர் சாலை சந்திப்புகளில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும் கடற்கரையில் புத்தாண்டை கொண்டாடுபவர்கள் கடலில் இறங்காமல் தடுக்கவும் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. இரும்பு, மரக்கம்புகளை வைத்து இந்த தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்பு தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு இஷாசிங் தலைமையில் போலீசார் நேற்று இரவு கடற்கரையில் ஆய்வு செய்தனர்.