புதுச்சேரியில் புத்தாண்டை வரவேற்க புதிய வகை மதுபானங்கள் அறிமுகம்
- பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே மது வகைகளுக்கு புகழ்பெற்ற பகுதியாக புதுச்சேரி உள்ளது.
- பார்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கி உள்ளனர்.
பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே மது வகைகளுக்கு புகழ்பெற்ற பகுதியாக புதுச்சேரி உள்ளது. விலை குறைவு, விதவிதமான மது வகைகள், வெளிநாட்டு மதுபானங்கள் போன்றவை தான் மது பிரியர்களை புதுச்சேரி நோக்கி இழுக்கிறது.
சுமார் 1000-க்கும் அதிகமான மது வகைகளும், 50-க்கும் மேற்பட்ட பீர் வகைகளும் புதுச்சேரியில் விற்பனையாகிறது.
சாதாரண மது பாரில் இருந்து பல வசதிகளுடன் கூடிய நட்சத்திர பார்களும், ரெஸ்டோ பார்களும் உள்ளது. இந்த நிலையில் 2025 புதிய புத்தாண்டை வரவேற்க மதுபான கடைகள் புதுபொலிவு பெறுகின்றன.
புதுச்சேரி கலால் துறை புத்தாண்டு நள்ளிரவில் நள்ளிரவு 1 மணி வரை பார்களில் மது விநியோகம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. பார்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
புத்தாண்டு நள்ளிரவில் மது பார்களில் டி.ஜே. இசை நிகழ்சிகளுக்கும், கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை ஈர்க்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் 40-க்கும் மேற்பட்ட புதிய மதுவகைகள் புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ன.
ஜப்பான் விஸ்கி, மெக்சிக்கோ டக்கீலா, லண்டன் ஜின், பிரான்ஸ் ஒயின்,இத்தாலி பீர், நியூயார்க் ஓட்கா, கோவா பென்னி, காஷ்மீர் பீர் என விதவிதமான மதுவகைகள் வரிசை கட்டி காத்திருக்கிறது.