புத்தாண்டு கொண்டாட்டம்- புதுச்சேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- புதுச்சேரியில் கடந்த கிறிஸ்துமஸ் முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
- கடற்கரை சாலையில் நள்ளிரவு 12.30 மணி வரை புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்படுவர்.
புதுச்சேரி:
நாட்டிலேயே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அதிமானவர்கள் கூடும் இடமாக புதுச்சேரி உள்ளது.
ஆண்டுதோறும் புத்தாண்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல நகர பகுதிகளில் ஓட்டல்கள், மதுபார்கள், ரெஸ்டோபார்கள், திறந்தவெளி மைதானங்களில் 31-ந் தேதி நள்ளிரவில் இசை, விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பங்கேற்கின்றனர். கடற்கரை சாலையிலும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். புதுச்சேரியில் கடந்த கிறிஸ்துமஸ் முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
புத்தாண்டு கொண்டாட நேற்று முதல் ஆயிரக்கணக்கான வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். அருகில் உள்ள அண்டை மாநிலமான தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புத்தாண்டை கொண்டாட கார், இருசக்கர வாகனங்களில் புதுச்சேரிக்கு இன்று மாலை வருவார்கள்.
இவர்கள் அனைவரும் புத்தாண்டை கொண்டாடிவிட்டு பாதுகாப்பாக திரும்பி செல்ல அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புத்தாண்டு பாதுகாப்பு பணிக்காக புதுச்சேரி கடற்கரை மற்றும் நகர பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 500 தன்னார்வலர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
போக்குவரத்தை முறைப்படுத்த 300 போலீசார், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் என ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று காலை முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு பணிக்கு வந்தனர்.
மதியம் ஒரு மணி முதல் ஒயிட் டவுண் பகுதியில் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. ஆம்பூர் சாலையிலிருந்து கடற்கரை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் பேரிகார்டுகள் மூலம் மூடப்பட்டது.
அந்த பகுதியில் வசிப்பவர்கள், ஓட்டலில் தங்கியுள்ளவர்கள் காவல்துறை வழங்கிய அடையாள அட்டையை காட்டி சென்றனர். நகர சாலைகளில் வாகனங்களை நிறுத்தவும் போலீசார் தடை விதித்தனர்.
சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த பாரதிதாசன் மகளிர் கல்லூரி, உப்பளம் மைதானம் உட்பட 10 இடங்களில் நிறுத்த வசதி செய்யப்பட்டிருந்தது. இங்கிருந்து கடற்கரை சாலைக்கு செல்ல இலவசமாக 30 அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.
கடற்கரை சாலையில் நள்ளிரவு 12.30 மணி வரை புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்படுவர். மதுபார்களில் இரவு ஒரு மணி வரை மது விநியோகம் செய்ய கலால்துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என போலீசாருக்கு உயரதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கேட்கும் தகவல்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்து கனிவோடு சுற்றுலா பயணிகளை அணுக வேண்டும் எனவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடற்கரை சாலையில் சி.சி.டி.வி. கேமரா, கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டிரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு செய்யப்பட்டது.
வழக்கமாக புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் இசை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடைபெறும். இந்தஆண்டு போலீசார் இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கவில்லை.
மாநிலத்தின் எல்லை பகுதியிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.