null
புத்தாண்டு கொண்டாட்டம்- புதுச்சேரியில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை
- நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புதுச்சேரிக்கு மது பிரியர்கள் வருகின்றனர்.
- புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் புதிய மது வகைகளும் அறிமுகப்படுத்தப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி என்றவுடன் நினைவுக்கு வருவதில் மதுவும் ஒன்று.
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது வகைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பீர் வகைகளும் புதுச்சேரியில் கிடைக்கிறது.
இதை அருந்துவதற்கு நின்றபடி அருந்தும் மது பார்கள் முதல் ஏ.சி. அறைகள் மற்றும் நவீன அலங்காரத்துடன் கூடிய பார்கள் வரை உள்ளது. இதற்காகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புதுவைக்கு மது பிரியர்கள் வருகின்றனர்.
அதிலும் டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி சுமார் 10 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை புதுவையில் அதிகமாக இருக்கும். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு குழாம், கடற்கரை சாலை, பூங்காவில் சுற்றித் திரிந்தாலும், இரவில் மது வகைகளை நாடுகின்றனர்.
புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் புதிய மது வகைகளும் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்டு 40 வகையான புதிய மது வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. மது பிரியர்களை வரவழைக்கும் வகையில் மது வாங்கினால் சிற்றுண்டி, தள்ளுபடி என பல சலுகைகளும் வழங்கப்பட்டது.
வழக்கமாக விற்பனையாகும் மது வகைகளின் அளவை விட கிறிஸ்துமஸ் விடுமுறை முதல் நாள்தோறும் படிப்படியாக விற்பனை அதிகரித்து வந்தது.
உச்சகட்டமாக புத்தாண்டு நள்ளிரவில் விற்பனை இருமடங்காக இருந்தது. இதற்கேற்ப் பார்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மதுபார்கள், ரெஸ்டோ பார்கள், மது விற்பனை நிலையங்கள், ரிசார்ட்டுகளில் மது விற்பனை இரு மடங்காகியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனையை கணக்கிட முடியும். ஆனால் புதுவையில் தனியார் மதுபார்களே அதிகம். இதனால் விற்பனையை துல்லியமாக கணிக்க முடியாது.
அதுபோல் ரிசார்ட்டுகளில் நடந்த புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளில் அளவற்ற மது வழங்கியதை கணக்கிட முடியாது. இருப்பினும் சுமார் ரூ.50 கோடிக்கு அதிகமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது புதுச்சேரியில் மது விற்பனை நடந்துள்ளதாக மது விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு மாதத்திற்கான விற்பனை நடந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.