புதுச்சேரி

கவர்னர் தலைக்கு மேல் சுற்றிய விநாயகர் சிலை - புதுச்சேரியில் பரபரப்பு

Published On 2024-09-12 06:36 GMT   |   Update On 2024-09-12 06:36 GMT
  • கிரேன் மூலம் 21 அடி உயரமுள்ள விநாயகர் சிலை கடற்கரை சாலையில் இருந்து தூக்கப்பட்டு கடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
  • சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பதட்டம் ஏற்பட்டது.

புதுச்சேரி:

புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நகரம், கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி பேரவை, இந்து முன்னணி சார்பில் 150 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்த விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று தொடங்கியது. புதுவை முழுவதும் வைக்கபட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் வேன், மாட்டு வண்டிகள் மூலம் சாரம் அவ்வை திடலுக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு நிறுவப்பட்டுள்ள 21 அடி உயர விநாயகர் சிலை முன்னே செல்ல அனைத்து சிலைகளும் அணிவகுத்து பின்னே சென்றன. ஊர்வலம் செல்லும் நேருவீதி, காந்திவீதி, எஸ்.வி.படேல் சாலை வழியாக மாலை 6 மணிக்கு கடற்கரை சாலையை அடைந்தது. பிறகு விநாயகர் சிலைகளுக்கு மங்கள ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வகணபதி எம்.பி. மற்றும் பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து கிரேன் மூலம் 21 அடி உயரமுள்ள விநாயகர் சிலை கடற்கரை சாலையில் இருந்து தூக்கப்பட்டு கடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது காற்று பலமாக வீசியதால் திடீரென விநாயகர் சிலை அந்தரத்தில் மேலே சுழன்று மீண்டும் கரை பகுதிக்கு சென்றது. கடற்கரையில் கவர்னர் கைலாஷ்நாதன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் பொது மக்கள் நின்று கொண்டிருந்த பகுதிக்கு மேலே வந்து சுழன்றது. இதனால் அங்கிருந்த அனைவரும் அச்சமடைந்து கூச்சலிட்டதால் திடீர் பதட்டம் ஏற்பட்டது. இதனிடையே கவர்னர் கைலாஷ்நாதன் தலைக்கு மேல் கிரேனில் ஏற்றிய 21 அடி விநாயகர் சிலை 3 முறை சுழன்றது.

இதனை உணர்ந்த போலீசார் உடனடியாக ஓடி சென்று கிரேன் ஆபரேட்டரிடம் கூறினர். கிரேன் ஆபரேட்டர் சுதாரித்து கொண்டு விநாயகர் சிலை சுழல்வதை நிறுத்தி கடல் பக்கம் திருப்பினார். அதேநேரத்தில் பாதுகாப்புடன் போலீசார் கவர்னரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இதனால் சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளும் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன.

Tags:    

Similar News