பகலில் தச்சு தொழில், இரவில் கொள்ளை: இரட்டை வேடங்களில் உலாவிய வாலிபர் கைது
- ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீடுகளில் கொள்ளை அடித்துள்ளார்.
- சிவானந்தம் 2 வீடுகளிலும் கொள்ளை அடித்ததை ஒப்பு கொண்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலில் போலீசார் எல்லைப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரனாக பேசினார். இதனால் அவரை கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று உரிய முறையில் விசாரித்தனர். அப்போது அவர் பூம்புகாரை சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் (வயது 34) என தெரிய வந்தது.
தச்சுத்தொழில் செய்யும் சிவானந்தம் தன்னை அப்பாவி போல காட்டி கொண்டார். ஆனால் அவரது செல்போனை சோதனை செய்த போது கடந்த டிசம்பர் 10-ந் தேதி காரைக்கால் வந்துள்ளார். அதேபோல ஜனவரி 14-ந் தேதி மீண்டும் காரைக்காலுக்கு வந்துள்ளார்.
அதே நாளில் காரைக்காலில் 2 இடங்களில் 2 வீட்டை உடைத்து நகைகள் திருடு போய் இருந்தது. அவரது செல்போன் டவரும் அந்த வீட்டு அருகே இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
தொடர் விசாரணையில் சிவானந்தம் 2 வீடுகளிலும் கொள்ளை அடித்ததை ஒப்பு கொண்டார். அங்கு திருடிய ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை உருக்கி தனது வீட்டு தோட்டத்தில் மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
தச்சு வேலை செய்யும் சிவானந்தம் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அதற்கு தேவையான பணத்தை சம்பாதிக்க வழி இல்லாத காரணத்தால் வீடுகளில் கொள்ளை அடித்துள்ளார்.
காரைக்காலை போல மயிலாடுதுறையில் 4 வீடுகளை உடைத்து நகை-பணத்தை அவர் கொள்ளை அடித்துள்ளார். மேலும் ஒரு கொலை வழக்கிலும் சிக்கியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பகலில் தச்சு வேலை செய்யும்போது வீடுகளை நோட்டமிடும் இவர் இரவில் மது குடித்து விட்டு அந்த வீடுகளில் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சினிமா கதாநாயகனை போல பகலில் தச்சு தொழிலாளியாகவும், இரவில் வீடு புகும் கொள்ளையனாகவும் இரட்டை வேடங்களில் உலாவி வந்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த கோட்டுச்சேரி போலீசார் உருக்கிய நகைகளை மீட்டனர்.