ஆப்ரிக்கன் இன பறவையை கொத்த வைத்து மனைவியை சித்ரவதை செய்த கணவர்
- கணவரின் பெற்றோர், உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.
- வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை செய்து வந்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி வில்லியனுார் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் சென்னை ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2021-ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் ஆடம்பரமாக திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் 150 பவுன் நகை, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்க கடிகாரம், ரூ.1.30 லட்சம் செல்போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சீர் வரிசையாக வழங்கினர்.
இந்நிலையில் திருமணம் முடிந்த சில வாரத்திலேயே சீர்வரிசையாக அணிந்து வந்த நகைகளை மாமியார் பெற்று கொண்டார். மேலும் சில மாதங்களில் பெண்ணிடம் கூடுதலாக 50 பவுன் நகை வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை செய்து வந்தார்.
அதோடு பெண்ணின் பெற்றோர் வீட்டு சொத்தை தனது பெயரில் எழுதித் தர வேண்டும் என அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.
இதற்கு மறுத்த அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டில் வளர்த்து வரும் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் காங்கோ சாம்பல் பறவையை கொத்த வைத்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கணவரின் பெற்றோர், உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.
தொடர்ந்து இதுபோன்ற கொடுமை செய்து வந்ததால் அந்த பெண் புதுச்சேரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். பின்னர் இதுகுறித்து வில்லியனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வரதட்சணை கொடுமை செய்த கணவர் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.