புதுச்சேரி
null

புத்தகம் தூக்க வேண்டிய மாணவனின் கையில் கத்தியை எடுக்க வைத்த காதல் விவகாரம்

Published On 2025-01-23 10:35 IST   |   Update On 2025-01-23 11:12:00 IST
  • பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக செயல் பட்டுள்ளனர்.
  • கத்தியால் வெட்டிய மாணவரின் புத்தக பையை ஆசிரியர்கள் சோதனை செய்தனர்.

புதுச்சேரி:

காதல் விவகாரம் ஒருவரை ஆத்திரத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில் புதுச்சேரியில் பள்ளி வகுப்பறையில் மாணவர் ஒருவர் சக மாணவனை கத்தியால் குத்தும் அளவிற்கு சென்றுள்ளது.

புதுச்சேரி மூலக்குளம் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டுள்ளனர். அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பு மாணவன், மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளார்.

இதையறிந்த மற்றொரு தரப்பினர் மாணவி பெயரில் போலி சமூகவலைதள ஐ.டி. உருவாக்கி, மாணவருக்கு மாணவி அனுப்புவதுபோல குறுஞ்செய்தி அனுப்பி வந்தனர். அந்த மாணவரும், தான் காதலிக்கும் மாணவி தான் குறுஞ்செய்தி அனுப்புவதாக நினைத்து மெசேஜ் மூலம் பேசி வந்தார்.

ஒரு கட்டத்தில், இனிமேல் என்னிடம் பேச வேண்டாம் என மாணவி போல அந்த தரப்பினர் மெசேஜ் செய்தனர். இதனால் சோகமடைந்த மாணவர், நேரடியாக மாணவியிடம் சென்று கேட்டார். அப்போது அந்த மாணவி, தனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது என கூறிவிட்டார்.


அந்த போலி ஐ.டி.யை உருவாக்கியது யார்? என மாணவர் விசாரித்த போது எதிர்தரப்பு மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ய போலி ஐ.டி. உருவாக்கியது அவர்கள் தான் என்பது தெரியவந்தது. அதோடு அந்த மாணவர்கள் ஏமாந்தாயா? என அவரை கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் அவமானப்பட்ட மாணவர் போலி ஐ.டி. உருவாக்கிய மாணவரை பழி தீர்க்க கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக புதிதாக கத்தி வாங்கிக் கொண்டு, பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி இடைவேளையில் மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர் போலி ஐ.டி. உருவாக்கிய மாணவரை குத்த முயன்றபோது, மற்ற மாணவர்கள் தடுத்தனர். இருப்பினும் அந்த மாணவரின் கையில் கத்தி வெட்டு விழுந்தது.

ஆசிரியர்கள் அங்கு விரைந்து வந்து கத்தியை பிடுங்கினர். காயமடைந்த மாணவரை மருத்துவமனை அழைத்துச் சென்று ஆசிரியர்கள் சிகிச்சை அளித்தனர். பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி நிர்வாகம் புகார் அளிக்க வேண்டாம் என கேட்டு கொண்டதால் பெற்றோர் போலீசில் புகார் அளிக்கவில்லை.

இதனிடையே கத்தியால் வெட்டிய மாணவரின் புத்தக பையை ஆசிரியர்கள் சோதனை செய்தனர். அப்போது அடுத்த அதிர்ச்சி ஏற்பட்டது.

புத்தக பையில் 6 நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளது. இதைக்கண்டு ஆசிரியர்களும், சக மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசுக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர்.

போலீசார் நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாணவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அரிவாளால் வெட்டிய மாணவரின் தந்தை போலீஸ் துறையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் மாணவர்களின் எதிர்காலம் கருதி வழக்கு பதியவில்லை.  

புத்தகம் தூக்க வேண்டிய கை கத்தியை எடுத்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News