புதுச்சேரி

எலுமிச்சை நறுமணம் வீசும் மிளகு- புதுச்சேரி பெண் விஞ்ஞானி கண்டுபிடிப்பு

Published On 2025-01-18 15:40 IST   |   Update On 2025-01-18 15:40:00 IST
  • புதிய தொழில்நுட்பத்தில் அதிக இனிப்பு சுவை கொண்ட 2 அத்தி ரக செடிகளை உருவாக்கினார்.
  • மிளகு இனம் ஓராண்டு 8 மாதத்தில் மகசூல் தர கூடியது.

புதுச்சேரி:

புதுச்சேரி கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடபதி. ஆராய்ச்சியின் மூலம் கனகாம்பரம் பூவில் பல 100 வகையான செடிகளை உருவாக்கி, சாதனை படைத்தவர். இதற்காக இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இவரது மகள் ஸ்ரீலட்சுமி (வயது 32) எம்.பி.ஏ., பட்டதாரியான இவர் தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

இதன் விளைவாக, ஆரஞ்சு, சாக்லெட், நாவல், பன்னீர் சுவை கொண்ட கொய்யா செடிகளை உருவாக்கினார். ஆரஞ்சு கொய்யா செடியை பிரதமர் மோடி பெயரிலும், சாக்லெட் கொய்யா செடியை புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்பேடி பெயரிலும் அறிமுகப்படுத்தினார்.

மேலும் புதிய தொழில்நுட்பத்தில் அதிக இனிப்பு சுவை கொண்ட 2 அத்தி ரக செடிகளை உருவாக்கினார்.

காய்க்காத மிளகு செடிகளை காய்க்க வைப்பதற்காக இயற்கை முறையிலான கரைசல் ஊக்கியை கண்டுபிடித்தார். தற்போது எலுமிச்சை சுவையில் நறுமண மிளகை புதிதாக உருவாக்கி அசத்தியுள்ளார்.

இது குறித்து இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி, கூறியதாவது:-

விவசாயத்தில் புதிய தொழில் முறைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதன் அடிப்படையில் ஏற்கனவே நான் குறைந்த பருவத்தில் அதிக விளைச்சல் தர கூடிய மிளகு இனத்தை கண்டுபிடித்தேன். பொதுவாக மிளகு இனத்தில் நட்ட 7-வது ஆண்டில் தான் மகசூல் கிடைக்கும். அதுவும் 25 அடியை தொட வேண்டும். ஆனால், நான் கண்டுபிடித்துள்ள மிளகு இனம் ஓராண்டு 8 மாதத்தில் மகசூல் தர கூடியது. 15 அடியே போதுமானது.

இப்போது அதேபோன்று 15 அடியில் விளைச்சல் தர கூடிய புதிய மிளகு இனத்தை கண்டுபிடித்துள்ளேன். இதனுடைய காய்கள், இலைகளை சுவைத்தால் எலுமிச்சை நறுமணம் வரும். காரமும் சாதாரண மிளகு இனத்தை காட்டிலும் அதிக காரம் இருக்கும். சூரிய கதிர்வீச்சினால் மாற்றம் ஏற்பட்டு, இதனை கண்டுபிடித்துள்ளேன் என்றார்.

Tags:    

Similar News