வடமாநில மாணவியிடம் அத்துமீறிய மேலும் 2 சிறுவர்கள் சிக்கினர்
- மதுபோதையில் 2 பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள், மாணவி மற்றும் அவரது நண்பரை வீடியோ எடுத்து தகராறு செய்தனர்.
- ஷாம் மற்றும் விமலை காலாப்பட்டு போலீசார் கைது செய்து கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த 11-ந் தேதி விடுதியில் தங்கி படிக்கும் வடமாநில மாணவி ஒருவர், தனது சக கல்லூரி நண்பருடன் நடந்து சென்றார்.
அப்போது மதுபோதையில் 2 பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள், மாணவி மற்றும் அவரது நண்பரை வீடியோ எடுத்து தகராறு செய்தனர். இருவரும் மாறி மாறி வீடியோ எடுத்தபோது மோதல் உருவானது. ஒரு கட்டத்தில் அந்த கும்பல் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது. இதில் படுகாயம் அடைந்த மாணவி, கதிர்காமம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாணவி புகார் அளிக்க முன்வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவி மற்றும் மாணவரிடம் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டது தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் மற்றும் அவரது உறவினர்கள் என தெரியவந்தது.
தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவி மற்றும் மாணவரை ஆபாசமாக திட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக பதிவாளர் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.
காலாப்பட்டு போலீசார் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திற்குள் அத்துமீறி நுழைதல், மாணவர்களை ஆபாசமாக திட்டுதல் என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது, மேட்டுப்பாளையம் தனியார் கம்பெனியில் பணியாற்றும் அரும்பார்த்தபுரம் ஷாம் (வயது19), வில்லியனூர் திருக்காஞ்சி சாலையை சேர்ந்த அரசு கலை கல்லூரி மாணவர் விமல்(19) மற்றும் 2 சிறுவர்கள் என தெரியவந்தது.
ஷாம் மற்றும் விமலை காலாப்பட்டு போலீசார் கைது செய்து கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் 17 வயதுக்குட்பட்ட 2 சிறுவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்தனர். விசாரணை நடத்தி அவர்களை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.