போகி பண்டிகையின்போது புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட காற்றின் மாசு குறைவு
- போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய விரிப்பான்கள், துணிகள் போன்ற பொருட்களை எரிப்பது வழக்கம்.
- நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 15.5 மைக்ரோ கிராம், அமோனியாவின் அளவு 50 மைக்ரோ கிராம் என பதிவாகியுள்ளது.
புதுச்சேரி:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகளில் பழைய பொருட்களை பொதுமக்கள் தீயிட்டு எரித்து, அகற்றுவது வழக்கம்.
ஆனால் கடந்த சில வருடங்களாக, போகியன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதால் நச்சு புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு சுற்றுச்சூழல் சீர்கேடு அடைகிறது.
எனவே, போகி அன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக், தெர்மோகோல், செயற்கை இழைத்துணி போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம் என்று மாசு கட்டுப்பாட்டு குழுமம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்தச் சூழலில், புதுச்சேரியில் 2024-ம் ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு போகி பண்டிகையன்று காற்றின் மாசு அளவு குறைந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய விரிப்பான்கள், துணிகள் போன்ற பொருட்களை எரிப்பது வழக்கம். காலப்போக்கில் இத்தகைய பொருட்களுடன் வீட்டில் உள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், டயர் போன்ற பொருட்களை எரிக்க தொடங்கினர்.
இதனால் காற்றில் மாசுக்களின் அளவு அதிகரித்தது புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம், இத்தகைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியது. இந்தச் சூழலில் புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், அண்ணா நகர் மற்றும் காரைக்காலில் ஒரு இடத்திலும் போகி அன்று காற்றின் மாசு 24 மணி நேரம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் மிதவை துகள்களின் அளவு 54 மைக்ரோ கிராம், கந்தக ஆக்ஸைடுகளின் அளவு 10.4 மைக்ரோ கிராம். நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 15.5 மைக்ரோ கிராம், அமோனியாவின் அளவு 50 மைக்ரோ கிராம் என பதிவாகியுள்ளது.
2024-ம் ஆண்டில் மிதவை துகள்களின் அளவு 138 மைக்ரோ கிராம். நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 23.6 மைக்ரோ கிராம் என பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போகி அன்று ஏற்பட்ட சிறு மழை தூறலும், மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் இந்த ஆண்டில் காற்றின் மாசு அளவு குறைய காரணமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.