புதுச்சேரி-தமிழகத்தில் 50 கடைகள், வீடுகளின் பூட்டுகளை உடைத்து பணம், பொருட்களை திருடிய முதியவர் கைது
- தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
- ரவிக்குமாரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி தர்மாபுரி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராஜாமுகமது, (வயது 49). இவர், நடேசன் நகர், 2-வது குறுக்கு தெருவில், குளிசாதன பெட்டி சர்வீஸ் மற்றும் விற்பனை கடை நடத்தி வருகிறார்.
கடந்த 5-ந் தேதி வழக்கம்போல் கடையை பூட்டி சென்றார். 6-ந் தேதி கடையை திறக்க வந்த போது கடையின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
கடையின் உள்ளே உள்ள மேசை டிராயர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.19 ஆயிரம் மற்றும் கை கடிகாரம் திருடப்பட்டிருந்தது.
இதையடுத்து அங்குள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, மேஜை டிராயரை திறந்து பணம் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாாணை நடத்தினர்.
விசாரணயில் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் கைகடிகாரத்தை திருடியவர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஓகை கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் என்ற ஓகை குமார் (வயது 68) என தெரியவந்தது.
அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுவையில் இதுபோன்று 15-க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து நகை-பணம் திருடியவர் என்பதும் அதோடு கோவில் உண்டியலை உடைத்தும், வீடு புகுந்தும் திருடிய வழக்குகள் உள்ளது.
இதுதவிர தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
இதைதொடர்ந்து ரவிக்குமாரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.