புதுச்சேரி

அ.தி.மு.க. பிரமுகரின் ரூ.50 கோடி சொத்து அபகரிப்பு- ஆள்மாறாட்டம் செய்த கடலூர் பெண் கைது

Published On 2025-01-19 10:19 IST   |   Update On 2025-01-19 10:19:00 IST
  • வில்லியனுார் சார் பதிவாளர் பாலமுருகன் சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார்.
  • சி.பி.சி.ஐ.டி., போலீசார் சூர்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் சிவகாமி நகரில் வசித்து வந்தவர் பிரியா என்ற பச்சையம்மாள், அ.தி.மு.க. மகளிர் அணி இணை செயலாளராக இருந்து வந்தார்.

கடந்த 2001-ம் ஆண்டு பிரியா தற்கொலை செய்து கொண்டார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பிரியா சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் அப்போதைய முதலமைச்சரிடம் புகார் அளித்தார்.

பிரியா பெயரில் உள்ள பல கோடி மதிப்பிலான நில பத்திரங்கள் மாயமானதாகவும் அவை தற்போது விற்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இறந்த பிரியா கடந்த 1998-ம் ஆண்டு புதுச்சேரி ஒதியம்பட்டு கிராமத்தில் 14 ஆயிரத்து 400 சதுர அடி அளவு நிலத்தை வாங்கி தனது பெயரில் பதிவு செய்து வைத்திருந்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.50 கோடி.

இந்த நிலத்தை வில்லியனூர் கணுவாப்பேட்டை முனியன் மற்றும் அவருடன் சிலர் சேர்ந்து பிரியா என்ற பச்சையம்மாள் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து அந்த இடத்தை அபகரித்து மனைகளாக பிரித்து பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

இது தொடர்பாக வில்லியனுார் சார் பதிவாளர் பாலமுருகன் சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கணுவாப்பேட்டை, புதுநகர், 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த முனியன், (40); 3வது வன்னியர் வீதியைச் சேர்ந்த காந்தி என்ற நிக்கல்குமார், (48) மற்றும் ஒரு பெண் நிலத்தை அபகரிப்பு செய்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து முனியன் மற்றும் காந்தி என்ற நிக்கல்குமாரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இறந்த பிரியா என்ற பச்சையம்மாளுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்யப்பட்டவர், கடலுார் மாவட்டம், புதுப்பாளையம் சஞ்சீவி மனைவி சூர்யா(53). என தெரியவந்தது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் சூர்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News