நண்பரின் பாட்டியை கத்தியால் குத்தி கொன்ற ரவுடிக்கு ஆயுள் தண்டனை
- பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதில் கன்னியம்மாளை சங்கர் கொலை செய்தது உறுதியானது.
- சங்கருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (வயது28) . ரவுடியான இவர் மீது கொலை மற்றும் பல்வேறு வழக்குகள் உள்ளது.
இவரும் அதே பகுதியை சேர்ந்தவர் விநாயகவேலன் என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இடையில் இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 14.03.2016 ஆண்டு விநாயகவேலனை கொலை செய்யும் நோக்கில் சங்கர் கையில் கத்தியுடன் அவரது வீட்டிற்கு சென்றார்.
அப்போது வீட்டில் விநாயகவேலன் இல்லை. அவரது சகோதரி முத்து லட்சுமி மற்றும் பாட்டி கன்னியம்மாள் (86) ஆகியோர் மட்டும் இருந்தனர். அவர்கள் சங்கரை வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்தனர்.
இதில் ஆத்திரமடைந்த சங்கர் முத்துலட்சுமியை மார்பிலும், கன்னியம்மாளை முதுகிலும் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு சங்கர் தப்பிச் சென்றார். இதில் படுகாயமடைந்த இருவரும் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கன்னியம்மாள் இறந்து போனார்.
இது குறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதில் கன்னியம்மாளை சங்கர் கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து சங்கருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விநாயகம் ஆஜராகி வாதாடினார்.