null
வகுப்பறையில் சக மாணவரை கத்தியால் குத்திய பள்ளி மாணவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு
- போலி ஐ.டி. உருவாக்கிய மாணவரை பழி தீர்க்க திட்டமிட்டார்.
- நீதிபதியின் உத்தரவின் பேரில் அரியாங் குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் மாணவனை அடைத்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மூலக்குளம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டுள்ளனர். இதில் ஒரு தரப்பு மாணவன், மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளார்.
இதையறிந்த மற்றொரு தரப்பினர் மாணவி பெயரில் போலி சமூகவலைதள ஐ.டி. உருவாக்கி, மாணவருக்கு மாணவி அனுப்புவதுபோல குறுஞ்செய்தி அனுப்பி வந்தனர். அந்த மாணவரும், தான் காதலிக்கும் மாணவி தான் குறுஞ்செய்தி அனுப்புவதாக நினைத்து மெசேஜ் மூலம் பேசி வந்தார்.
ஒரு கட்டத்தில், இனிமேல் என்னிடம் பேச வேண்டாம் என மாணவி போல அந்த தரப்பினர் மெசேஜ் செய்தனர். அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த மாணவன் ஆவேச மடைந்தார். போலி ஐ.டி. உருவாக்கிய மாணவரை பழி தீர்க்க திட்டமிட்டார்.
நேற்று முன்தினம் வகுப்பறையில் அந்த மாணவனை கத்தியால் குத்தினார். அப்போது அவரது பையில் 6 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தரப்பிலோ, பாதிக்கப்பட்ட மாணவர், பெற்றோர் தரப்பிலோ புகார் தரவில்லை. இருப்பினும் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் பள்ளி நிர்வாகத்தின் அறிக்கையை பெற்று ஆயுதங்களால் தாக்குவது மற்றும், வெடிகுண்டு வைத்திருந்தல் என்ற 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்.
மாணவரை கைது செய்து சிறுவர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் முன்பு ஆஜர்படுத்தினார். நீதிபதியின் உத்தரவின் பேரில் அரியாங் குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் மாணவனை அடைத்தனர்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அந்த பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேடடு நோட்டீஸ் அளித்துள்ளார்.