இதய அறுவை சிகிச்சை முன்னோடி டாக்டர் கே.எம்.செரியன் மறைவு- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இரங்கல்
- குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடியான திகழ்ந்தவர் மருத்துவர் கே.எம்.செரியன்.
- மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
இந்தியாவின் முதல் பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் (82) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடியான திகழ்ந்தவர் மருத்துவர் கே.எம்.செரியன்.
இந்தியாவில் எவரும் செய்யாத அரியதொரு மருத்துவ சாதனையாக ஏற்கனவே மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து காட்டிய பெருமைக்குரியவராவார் மருத்துவர் கே.எம்.செரியன்.
சென்னை பெரம்பூரிலுள்ள ரெயில்வே மருத்துவமனையில் இந்தியாவில் முதல்முறையாக கரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தவராவார். மருத்துவர் செரியனின் மருத்துவ சேவையைப் பாராட்டி அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
இதய அறுவை சிகிச்சை துறையில் மருத்துவர் செரியன் ஆற்றிய பங்களிப்புகள் தனி முத்திரையை பதித்துள்ளது. செரியனை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.