செய்திகள்

தமிழ்நாடு பிரிமீயர் லீக்: தம்பியிடம் வீழ்ந்த அண்ணன் பாபா இந்த்ராஜித்

Published On 2016-09-06 09:05 IST   |   Update On 2016-09-06 09:05:00 IST
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் அபராஜித் அதிரடி உதவியுடன் திருவள்ளூர் வீரன்ஸ் அணி, காஞ்சி வாரியர்சை எளிதில் வீழ்த்தியது.
நெல்லை :

முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை சங்கர் நகர், திண்டுக்கல் நத்தம் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் நெல்லை சங்கர்நகரில் நேற்று பிற்பகலில் நடந்த 14-வது லீக்கில் பாபா இந்த்ராஜித் தலைமையிலான காஞ்சி வாரியர்ஸ் அணி, பாபா அபராஜித் தலைமையிலான திருவள்ளூர் வீரன்ஸ் அணியை சந்தித்தது.

‘டாஸ்’ ஜெயித்த திருவள்ளூர் கேப்டன் பாபா அபராஜித், முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சதம் கண்ட பாபா அபராஜித் இந்த ஆட்டத்திலும் பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி பந்துகளை நாலாபுறமும் விரட்டியடித்தார். அபராஜித், 8-வது ஓவரில் கணேசின் பந்து வீச்சில் சிக்சர் விளாசி தனது அரைசதத்தை கடந்தார். 10.1 ஓவர்களில் திருவள்ளூர் அணி 100 ரன்களை தொட்டது. இந்த போட்டியின் முடிவில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் அபராஜித் அதிரடி உதவியுடன் திருவள்ளூர் வீரன்ஸ் அணி, காஞ்சி வாரியர்சை எளிதில் வீழ்த்தியது.

பாபா அபராஜித் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 4-வது ஆட்டத்தில் ஆடிய திருவள்ளூர் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். அதே சமயம் காஞ்சி அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

காஞ்சி அணியை வழிநடத்திய 22 வயதான பாபா இந்த்ராஜித்தும், திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் கேப்டன் பாபா அபராஜித்தும் இரட்டை சகோதரர்கள் ஆவர். ஆனாலும் அபராஜித்தை விட 26 நிமிடத்திற்கு இந்த்ராஜித் மூத்தவர் ஆவார். சென்னையைச் சேர்ந்த இருவரும் பெரிய போட்டியில் நேருக்கு நேர் கோதாவில் இறங்கியது இதுவே முதல்முறையாகும்.

இறுதியில் அபராஜித் அணி வெற்றி பெற்றது. “நாங்கள் எதிரெதிர் அணிகளில் விளையாடுவதை பார்க்க நன்றாக இருக்கிறது. இருவரும் தொழில்முறை ஆட்டக்காரர்கள். நல்ல கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்பது மட்டுமே எங்களது நோக்கம். அதை தவிர்த்து வேறு எதுவும் இல்லை” என்று அபராஜித் குறிப்பிட்டார்.

Similar News