விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அமெரிக்க வீரரை சந்திக்கிறார் ஜோகோவிச்

Published On 2025-01-10 10:17 IST   |   Update On 2025-01-10 10:17:00 IST
  • உலகின் 3-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் ஷெவ்செங்கோவுடன் தனது மோதலை தொடங்குகிறார்.
  • சபலென்கா கடந்த வாரம் நடந்த பிரிஸ்பேன் சர்வதேச போட்டியில் வென்ற உத்வேகத்துடன் கால் பதிக்கிறார்.

மெல்போர்ன்:

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 12-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் (டிரா) மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான ஜானிக் சினெர் (இத்தாலி) முதல் சுற்றில் தரவரிசையில் 34-வது இடம் வகிக்கும் சிலி வீரர் நிகோலஸ் ஜாரியை சந்திக்கிறார்.

கடந்த ஆண்டு அரையிறுதியில் ஜோகோவிச்சையும், இறுதிப்போட்டியில் டேனில் மெட்விடேவையும் வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சினெர் அதனை தக்கவைத்து கொள்ளும் முனைப்புடன் தயாராகி வருகிறார். ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய அவர் காலிறுதியில் சிட்சிபாஸ் (கிரீஸ்) அல்லது அலெக்ஸ் டி மினாரையோ (ஆஸ்திரேலியா), அரையிறுதியில் மெட்விடேவையோ சந்திக்க வேண்டியது வரலாம்.

10 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தனது முதலாவது ஆட்டத்தில் 'வைல்டு கார்டு' மூலம் களம் இறங்கும் 133-ம் நிலை வீரரான அமெரிக்காவின் நிஷேஷ் பசவாரெட்டியை எதிர்கொள்கிறார். ஆஸ்திரேலிய ஓபன் (10 முறை) மற்றும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அதிக முறை (24) வென்ற வீரர் என்ற பெருமைக்குரிய ஜோகோவிச் கடந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் எதுவும் வெல்லவில்லை. அந்த குறையை போக்கும் ஆர்வத்துடன் இருக்கும் அவருக்கு இந்த போட்டி தொடரில் கடும் பலப்பரீட்சை காத்திருக்கிறது. அவர் எதிர்பார்த்தப்படி முன்னேற்றம் கண்டால் காலிறுதியில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான கார்லஸ் அல்காரசுடனும் (ஸ்பெயின்), அரையிறுதியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவுடனும் (ஜெர்மனி) மோதக்கூடும்.

உலகின் 3-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் ஷெவ்செங்கோவுடன் தனது மோதலை தொடங்குகிறார். 2-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ், வைல்டு கார்டு மூலம் வாய்ப்பு பெற்றுள்ள பிரான்சின் லூகாஸ் பொய்லியை சந்திக்கிறார். இதேபோல் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் டெல்யர் பிரிட்ஸ், சக நாட்டை சேர்ந்த ஜெனசன் புரூக்ஸ்பியையும், 6-ம் நிலை வீரரான நார்வேயின் கேஸ்பர் ரூட், ஸ்பெயினின் ஜாமி முனாரையும், ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், வைல்டு கார்டு வாய்ப்பு மூலம் நுழைந்துள்ள காசிடிக் சாம்ராஜையும் (தாய்லாந்து) சந்திக்கின்றனர்.

உலக தரவரிசையில் 96-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் 26-ம் நிலை வீரரான தாமஸ் மச்சாக்குடன்(செக்குடியரசு) பலப்பரீட்சை நடத்துகிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் தொடக்க சுற்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான அரினா சபலென்காவுக்கு (பெலாரஸ்) கடும் சவால் காத்து இருக்கிறது. தொடர்ந்து 3-வது முறையாக பட்டம் வெல்லும் ஆர்வத்துடன் இருக்கும் சபலென்கா, 2017-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோன் ஸ்டீபன்சுடன் தனது பயணத்தை தொடங்குகிறார். சபலென்கா கடந்த வாரம் நடந்த பிரிஸ்பேன் சர்வதேச போட்டியில் வென்ற உத்வேகத்துடன் கால் பதிக்கிறார்.

'டிரா' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சபலென்கா கூறுகையில், 'ஆஸ்திரேலிய ஓபனை தொடர்ந்து 2 முறை வென்று திரும்பி இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் தொடர்ந்து என்னால் சிறப்பாக செயல்பட முடியும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளவருமான அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன் முன்னாள் சாம்பியனும், சக நாட்டு வீராங்கனையுமான சோபியா கெனினுடன் மோதுகிறார்.

2-ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து). செக்குடியரசின் கேத்ரினா சினியாகோவாவையும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்), கரோலின் கார்சியாவையும் (ஜெர்மனி), விம்பிள்டன் முன்னாள் சாம்பியனான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), வைல்டு கார்டு மூலம் வாய்ப்பு பெற்று இருக்கும் எமெர்சன் ஜோன்சையும் (ஆஸ்திரேலியா), பிரெஞ்சு ஓபன் முன்னாள் சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா), பெலின்டா பென்சிச்சையும் (சுவிட்சர்லாந்து), 4-ம் நிலை வீராங்கனை ஜாஸ்மின் பாலினி (இத்தாலி), தகுதி சுற்று மூலம் முன்னேறிய சீனாவின் சிஜி வெய்யையும், ஒலிம்பிக் சாம்பியன் கின்வென் செங் (சீனா), ருமேனியாவின் அன்கா தடோனியையும் எதிர்த்து ஆடுகின்றனர்.

Tags:    

Similar News