இந்திய பயிற்சியாளர் குழுவில் மேலும் சிலரை சேர்க்க கிரிக்கெட் வாரியம் முடிவு
- மோசமான தோல்வியால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.
- விராட் கோலி கேப்டனாக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட விதிகளை மீண்டும் அமல்படுத்தவும் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக 2 டெஸ்ட் தொடரை இழந்தது.
நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட் வாஷ் ஆனது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 5 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
இந்த மோசமான தோல்வியால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் மேலும் சிலரை சேர்க்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக பேட்டிங் பயிற்சியாளராக கூடுதலாக உள்ளூர் ஜாம்பவான்களை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக காம்பீர் உள்ளார். ரையன் டென் டோஸ்கேட், அபிஷேக் நாயர், மோர்னே மோர்கல், திலீப் ஆகியோரும் பயிற்சியாளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கிடையே விராட் கோலி கேப்டனாக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட விதிகளை மீண்டும் அமல்படுத்தவும் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
உடல் தகுதி, யோ யோ சோதனை உள்ளிட்ட பல்வேறு விதமான பரிசோதனைகளை வீரர்களிடம் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.